மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

முறைகேடு புகார்கள்: ஆட்சி முடிவுக்கு வரப்போவது உண்மை!

முறைகேடு புகார்கள்: ஆட்சி முடிவுக்கு வரப்போவது உண்மை!

ஆட்சியாளர்களின் முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என ஆட்சியாளர்கள் மீது சமீபகாலமாக முறைகேடு புகார்களும், ஊழல் புகார்களும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 12) செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், “முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதுள்ள முறைகேடு புகார்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. ஒரு நோயாளி அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்போது ஒவ்வோர் உறுப்பாகச் செயலிழப்பது போல, முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினை உருவாகியுள்ளது. இதெல்லாம் இந்த ஆட்சி அடங்கப்போகிறது என்பதைத்தான் காட்டுகிறது. இந்த ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதுதான் உண்மை” என்று தெரிவித்தார்.

பெண் பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்திருந்த எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது டைம்ஸ் ஆப் இந்தியா பெண் நிருபரை விமர்சித்திருக்கின்றனர். இதுதான் வேலுமணியின் அவரது உறவினர்கள், நண்பர்களின் தரம் என்று கூறிய தினகரன், “அமைச்சராக இருப்பதனால் இவர்கள் பரிசுத்தவான்கள் கிடையாது. முறைகேட்டில் சிக்கி இன்னும் எத்தனை நிறுவனங்களின் பெயர்கள் வெளிவரும் பாருங்கள். இவர்களின் மடியில் கனமில்லையெனில் உறுதியோடு நின்று அதைச் சந்திக்க வேண்டும். இப்படியெல்லாம் பதற்றப்படுவதன் மூலம், இதில் நிறைய விஷயங்கள் மறைந்துள்ளது என்பது தெரிகிறது” என்றும் விமர்சித்தார்.

அடுத்த பிரதமரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மூலம் தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பர் என்று குறிப்பிட்ட தினகரன், “2014 பாஜக தேர்தல் அறிக்கையில் சொன்னது எதுவும் நடக்கவில்லை என்று மத்திய அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பண மதிப்பழிப்பு என்னும் தவறான முடிவின் காரணமாக, பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வளர்ச்சிக்காகவே பல்வேறு முயற்சிகளை நாங்கள் எடுக்கிறோம் என்று அவர்கள் சொன்னாலும், மக்களைப் பாதிக்கும் முயற்சிகளையே அவர்கள் முன்னேடுக்கின்றனர். அதனால்தான் 2019 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறி வருகிறேன்” என்று கூறி முடித்தார் தினகரன்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon