மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

கன்னியாஸ்திரி விவகாரம்: பேராயருக்கு சம்மன்!

கன்னியாஸ்திரி விவகாரம்: பேராயருக்கு சம்மன்!

கேரளாவில் பாலியல் புகாருக்கு ஆளான பேராயர் பிராங்கோ முலக்கல் வரும் செப்டம்பர் 19ஆம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று அம்மாநிலக் காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக, கடந்த ஜூன் 28ஆம் தேதியன்று போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று ஜலந்தர் சென்று, பேராயர் முலக்கல்லிடம் விசாரணை நடத்தினர் கேரள போலீஸார். ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொச்சியில் கடந்த ஐந்து நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர் கன்னியாஸ்திரிகள். பேராயர் முலக்கல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்குப் பெண்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து, டெல்லியிலுள்ள வாடிகன் தூதரகத்தைச் சேர்ந்த கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்குக் கடிதம் எழுதியிருந்தார் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி. அதில், 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை, பேராயர் முலக்கல் 13 முறை இயற்கைக்கு மாறான முறையில் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியிருந்தார். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் விசாரணையை முடக்க முயல்வதாகவும், பல கோடி ரூபாய் வரை பணம் தர முயன்றதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று (செப்டம்பர் 13) கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் பேராயரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறித்தும், அப்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் கேரளக் காவல் துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

நேற்று (செப்டம்பர் 12) நடந்த கேரளக் காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தில், செப்டம்பர் 19ஆம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகும்படி பேராயர் முலக்கலுக்கு சம்மன் அனுப்புவதென முடிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நிறைய முரண்பாடுகள் உள்ளதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் எர்ணாகுளம் ஐஜி விஜய் சகாரே. “இந்த முரண்பாடுகள் தீராதவரை, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வது கடினம். குற்றம்சாட்டப்பட்டவர் ஒத்துழைத்தால் மட்டுமே, அது நிகழும். அதனால், அவரிடம் விசாரணையை மேற்கொள்ளவுள்ளார் எஸ்பி சுபாஷ். இந்த வழக்கு மிகவும் பழையது என்பதால், அறிவியல்பூர்வமான ஆதாரங்களைத் திரட்டுவது கடினமானதாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கன்னியாஸ்திரி மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பேராயர் பிராங்கோ முலக்கல் நடவடிக்கை எடுத்ததாகவும், அதற்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon