மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ஆடுகளம்: முதலிடம் என்னும் மாயை!

ஆடுகளம்: முதலிடம் என்னும் மாயை!

அரவிந்தன்

இங்கிலாந்தில் தன் நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் 4-1 என்னும் கணக்கில் படுதோல்வி அடைந்தாலும் டெஸ்ட் அரங்கில் அந்த அணியின் முதலிடத்துக்கு எந்த ஆபத்தும் வந்துவிடவில்லை. அண்மைக் காலங்களில் இந்திய அணி பெற்றுள்ள தொடர் வெற்றிகளின் விளைவாகவே இந்தத் தோல்வியால் இந்தியாவின் இடம் பறிபோகாமல் பத்திரமாக இருக்கிறது.

முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருப்பது குறித்து எந்த அளவுக்கு இந்திய அணியும் அதன் ரசிகர்களும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும்? ஒரு தொடரில் பெற்ற தோல்வியைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும், பல தொடர்களில் பெற்ற வெற்றியால் கிடைத்திருக்கும் முதலிடத்தை இதை வைத்துக் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் சொல்லப்படுகிறது. இங்கிலாந்தில் பெற்ற தோல்வி கவுரவமான தோல்வி என்றும் சிலர் சொல்லத் தலைப்படுகிறார்கள். கடந்த 10-15 ஆண்டுகளில் எந்த இந்திய அணியும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இந்த அளவுக்கு நன்றாக ஆடவில்லை எனத் தற்போதைய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பெருமைப்பட்டுக்கொள்கிறார். நான்கு போட்டிகளில் தோல்வி ஒரே ஒரு போட்டியில் வெற்றி என்பது புள்ளிவிவர அடிப்படையில் மோசமான தோல்வியாக இருக்கலாம். ஆனால், உண்மையில் இந்தியா பெற்றிருப்பது அத்தனை மோசமான தோல்வி அல்ல என்றும் சொல்லப்படுகிறது.

தோல்வியின் தன்மை எத்தகையது?

இரண்டாம், ஐந்தாம் போட்டிகளில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு இல்லாத நிலை இருந்தது. மூன்றாம் போட்டியில் இந்தியா வென்றது. முதலாவது, நான்காவது போட்டிகளில் வெற்றிபெறக்கூடிய நிலையை எட்டிப் பிறகு சரிந்தது. அதாவது, மூன்று போட்டிகளில் வெற்றியை எட்டியது அல்லது வெற்றிக்கோட்டுக்கு அருகே சென்றது. இந்த அம்சங்களையும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 3-2 என இந்தியாவுக்குச் சாதகமாக மாறியிருக்கக் கூடும் என்பதையும் சுட்டிக்காட்டி, இது இந்திய அணியின் ஆட்டத் திறன் கூடியிருப்பதைக் காட்டுகிறது என வாதிடப்படுகிறது.

வெற்றி வாய்ப்புக்கும் வெற்றிக்கும் இடையிலான வேற்றுமை என்பது அத்தனை எளிதில் புறந்தள்ளக்கூடியதல்ல. வெற்றி பெற முடியாமல் போனது ஏன் என்பதைப் பார்க்கும்போதுதான் இந்திய அணியின் பலவீனங்கள் அம்பலமாகின்றன. பொதுவாகவே இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்ட இந்தியப் பந்து வீச்சாளர்கள் வெற்றி வாய்ப்புகளை உருவாக்கினார்கள். மட்டையாளர்களும் களத் தடுப்பாளர்களும் அந்த வாய்ப்புகளை வீணடித்தார்கள்.

வெளி மண்ணில் சொதப்பும் மட்டை

வேகப் பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் இந்திய மட்டையாளர்கள் தடுமாறுவதுண்டு. சுனில் கவாஸ்கர், மொஹீந்தர் அமர்நாத், திலீப் வெங்சர்க்கார் போன்றவர்கள் இத்தகைய ஆடுகளங்களில் நன்கு ஆடியிருக்கிறார்கள் என்றாலும் பொதுவாக இந்திய மட்டையாளர்கள் வேகமான களங்களில் சொதப்புவதுண்டு. 1990களில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இத்தகைய களங்களில் சீராக ஆடிவந்தார். புத்தாயிரத்துக்குப் பிறகு உருவான அணியில் சச்சின், ராகுல் திராவிட், வி.வி.எஸ்.லட்சுமணன், வீரேந்திர சேவாக், கவுதம் காம்பீர் ஆகியோர் இதுபோன்ற களங்களிலும் இந்தியாவின் மட்டை வீச்சுக்கு உயிர் கொடுத்தனர். இதே காலகட்டத்தில் ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா, அனில் கும்ப்ளே போன்றோர் சிறப்பாகப் பந்து வீசியதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் ஆடுகளங்களில் இந்தியா வெற்றிபெறத் தொடங்கியது. 2003-04, 2007-08 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடர்கள் இதற்குச் சான்று. 2007இல் இங்கிலாந்து சென்ற இந்திய அணி மிகச் சிறப்பாக ஆடித் தொடரை வென்றது. 2011க்குப் பிறகே இந்தப் போக்கில் தொய்வு விழுந்தது.

சச்சின் முதலானோர் ஓய்வுபெற்ற பிறகு உருவான இளம் மட்டையாளர்கள் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஓரளவு நன்றாகவே ஆடிவருகிறார்கள். ஆனால், வெற்றிபெறும் அளவுக்கு இந்த ஆட்டங்கள் பல சமயங்களில் பரிமளிப்பதில்லை. 2014இல் இங்கிலாந்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. 2015இல் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் விராட் கோலி நன்றாகத்தான் ஆடினார். ஆனால், தொடரில் வெற்றிபெறும் அளவுக்கு அணியினரின் ஆட்டம் இல்லை. சதேஸ்வர் புஜாரா, முரளி விஜய், அஜிங்க்ய ரஹானே, கே.எல்.ராகுல் ஆகியோர் அவ்வப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், வெற்றிக் கோட்டைத் தொட அவை போதுமானவையாக இல்லை. தொடர்ந்து சீராக ஆடுவதில்லை. விக்கெட்டை இழக்கக் கூடாது என்னும் நிலையில் நின்று ஆடுவது, தேவைப்படும்போது அடித்து ஆடுவது ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் இவர்கள் இன்னமும் தேர்ச்சி பெறவில்லை.

தற்போது முடிவடைந்த தொடரிலும் கோலி, புஜாரா, ரஹானே, ராகுல் ஆகியோர் குறைந்தது ஆளுக்கு ஒரு இன்னிங்ஸேனும் நன்றாக ஆடினார்கள். ஆனால், இலக்கை நெருங்க வேண்டிய சமயத்தில் இவர்கள் சொதப்பினார்கள். உதாரணமாக, நான்காவது போட்டியில் இந்தியா 245 ரன்களை அடித்தால் வெற்றிபெற்றிருக்கலாம். அதுபோன்ற சூழலில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறிது நேரமேனும் நின்று ஆடியிருந்தால் பிறகு வருபவர்களின் வேலை எளிதாக இருக்கும். ஆனால், இந்தியா 9 ஓவர் முடிவதற்குள் 3 விக்கெட்களை இழந்தது. அதன் பிறகு இணைந்த கோலியும் ரஹானேயும் பொறுமையாகவும் பொறுப்பாகவும் ஆடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தபோது நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் 51ஆவது ஓவரில் கோலி ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. 70ஆவது ஓவருக்குள் 184 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

முதல் போட்டியிலும் இந்தியா 31 ரன்களில் வெற்றியைப் பறிகொடுத்தது. இந்த இரு போட்டிகளிலும் இந்திய மட்டையாளர்களால் இலக்கை எட்ட முடியவில்லை. இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், வெற்றிக்கு அருகில் வர முடிந்த இந்திய அணியால் வெற்றிக் கோட்டை ஏன் தாண்ட முடியவில்லை என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வி அணித் தேர்வில் இந்தியா செய்துவரும் தவற்றை அம்பலப்படுத்துகிறது.

அணித் தேர்வு என்னும் புதிர்

பொதுவாக எந்த அணியிலும் விக்கெட் காப்பாளரையும் சேர்த்து ஏழு மட்டையாளர்கள் இடம்பெறுவதே வழக்கம். ஆனால், இந்தத் தொடரில் முதல் நான்கு ஆட்டங்களில் விக்கெட் காப்பாளரையும் சேர்த்து ஆறு மட்டையாளர்களுடன் இந்தியா களமிறங்கியது. ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டராகக் கணக்கில் எடுத்துக்கொண்டதால் இந்த முடிவை இந்திய அணி எடுத்தது. ஆனால், ஒரே ஒரு போட்டியில் நன்றாகப் பந்து வீசியதைத் தவிர, மட்டையாட்டத்திலோ, பந்து வீச்சிலோ அவர் சோபிக்கவில்லை. ஐந்தாம் போட்டியில் அவர் நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி என்னும் மட்டையாளர் சேர்க்கப்பட்டார்.

டெஸ்ட் போட்டியில் ஒரு அணி 1000 ரன் எடுத்தாலும் வெற்றிபெற உத்தரவாதம் இல்லை. எதிரணியின் விக்கெட்களை வீழ்த்தினால்தான் வெற்றி கிட்டும். எனவே டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதில் தவறில்லை. கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் இருப்பது நல்லது என்பதில் மறுப்பில்லை. ஆனால், அப்படிச் சேர்க்கப்படுபவர் ஆல் ரவுண்டர் என்னும் இடத்துக்குப் பொருத்தமானவராக இருக்க வேண்டும். முதல் ஆட்டத்திலேயே ஹர்திக் பாண்டியாவின் பலவீனங்கள் அப்பட்டமாக வெளிப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் அவர் இடம்பெற்றார். இரண்டு போட்டிகளில் மோசமாக ஆடிய முரளி விஜய், தினேஷ் கார்த்திக் இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். ஆனால், பாண்டியா தொடர்ந்து தேர்வு பெற்றார். அவருடைய இடத்தில் ஒரு மட்டையாளரையோ அல்லது பந்து வீச்சாளரையோ எடுத்திருந்தால் இந்தியாவுக்குப் பலன் கிடைத்திருக்கலாம்.

முதல் போட்டியில் புஜாராவைத் தேர்ந்தெடுக்காமல் இருந்ததும் தவறுதான். அண்மைக் காலத்தில் புஜாராவின் ஆட்டம் அவ்வளவாகச் சோபிக்கவில்லை என்றாலும் இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களுக்கேற்ற தொழில்நுட்பத் திறன் அவரிடம் உள்ளது என்பதால் அவரை நீக்கியது கேள்விக்குரிய முடிவு.

நான்காவது போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முழு உடல் திறன் இல்லாத நிலையிலேயே அணியில் இடம்பெற்றார். அவருக்குப் பதில் அந்தப் போட்டியிலேயே ரவீந்திர ஜடேஜாவைத் தேர்வுசெய்திருக்க வேண்டும்.

இந்திய மட்டையாளர்கள் நெருக்கடியில் திணறும் போக்கும் இந்தத் தொடரில் நன்கு வெளிப்பட்டது. நான்காவது, ஐந்தாவது போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணி தொடங்கிய விதமே இதற்குச் சான்று. குறிப்பாகக் கடைசிப் போட்டியில் 2 ரன்னுக்கு 3 விக்கெட் என்னும் நிலையில் இந்தியா ஆட்டம்கண்டது. ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரின் ஆட்டத்தால் இந்திய அணி மோசமான தோல்வியிலிருந்து தப்பியது.

ஆட்டமிழக்கும் விதம்

எந்த மட்டையாளரும் சில சமயங்களில் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழப்பது இயல்புதான். இந்திய மட்டையாளர்கள் ஆட்டமிழப்பதைவிடவும், ஆட்டமிழக்கும் முறைதான் அதிர்ச்சி அளிக்கிறது. ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்துகளைத் தொட்டு ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழப்பதைப் பழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள் இந்திய மட்டையாளர்கள். விஜய், ஷிகர் தவன், புஜாரா, ராகுல், கோலி, ரஹானே என யாருமே இதற்கு விதிவிலக்கில்லை. ஓரிரு முறைகளில் அற்புதமான பந்துகளுக்கு இவர்கள் ஆட்டமிழந்தாலும், பொதுவாக, எந்தப் பந்தை ஆடுவது, எந்தப் பந்தை விடுவது என்பதில் உள்ள சஞ்சலமே இவர்களுடைய எமனாக அமைந்தது. முதல் போட்டியில் சதமடித்தபோது ஒரு கட்டம் வரையிலும் கோலி வெளியில் செல்லும் பந்துகளைத் தொட்டு மிகவும் அபாயகரமான முறையிலேயே ஆடிக்கொண்டிருந்தார். தடுப்பாளர்களின் சொதப்பலால் இரண்டு முறை தப்பிப் பிழைத்தார். அதன் பிறகே சுதாரித்துக்கொண்டு ஆடினார். தொடரில் இரு அணிகளிலும் அதிகபட்ச ரன்களை (593) எடுத்தவர் கோலிதான். அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜாஸ் பட்லர் எடுத்த ரன்கள் 349. அந்த வகையில் தான் சிறந்த மட்டையாளர் என்பதை கோலி நிரூபித்திருக்கிறார். டெஸ்ட் மட்டையாளர் தர வரிசையில் முதல் இடத்திலும் இருக்கிறார். ஆனால், பல சமயங்களில் அவர் ஆட்டமிழக்கும் விதம் அவரது திறனுக்கு ஏற்றதாக இல்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தன் மட்டையாட்டத்தை அவர் மேலும் சீராக்கிக்கொள்வது நல்லது.

ஒருவர் ஒரு இன்னிங்ஸில் நன்றாக ஆடி அடுத்த இன்னிங்ஸில் குறைவான ரன்னுக்கு ஆட்டமிழந்தால் அணியில் அவருடைய இடம் பாதிக்காது. ஆனால், ஆட்டம் அணியின் கையை விட்டுப் போயிருக்கும். இந்தியாவின் முன்னணி மட்டையாளர்கள் அனைவருமே இந்தத் தவற்றை அடிக்கடி செய்தார்கள். இந்தத் தவறு எந்த அளவுக்குக் குறைகிறதோ அந்த அளவுக்குத்தான் வெற்றிகளைப் பெற முடியும். வெற்றி கிட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் பல சமயம் நல்ல பந்துக்கு ஆட்டமிழக்காமல், அற்பமான தவற்றைச் செய்து ஆட்டமிழப்பது கூடுதலாகக் கவலையளிக்கிறது.

சாஸ்திரி ‘எழுதும்’ புது வரலாறு

கடந்த காலத்தின் அணிகளோடு ஒப்பிட்டுப் பெருமையடித்துக்கொள்ளும் ரவி சாஸ்திரி, புள்ளிவிவரங்களைச் சரியாகப் பார்க்க வேண்டும். நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தேவைக்கேற்ப அடித்து ஆடுவது, நின்று ஆடுவது என்னும் சவால்களை சவுரவ் கங்குலி, திராவிட், மகேந்திர சிங் தோனி ஆகியோர் தலைமையிலான அணிகள் நன்றாகவே எதிர்கொண்டன. காம்பீர், சச்சின், திராவிட், லட்சுமணன் ஆகியோர் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற ஆட்டத்தைப் பல முறை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 2003 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற போட்டிகளை மீள்பார்வை செய்தால் இது தெரியவரும். தற்போதுள்ள அணியின் மட்டையாளர்கள் சச்சின் முதலானோரோடு ஒப்பிடுகையில் அனுபவம் குறைவானவர்கள். எனவே, அவர்கள் தவறுவதில் பிரச்சினை இல்லை. அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் மேலும் சிறப்பாக ஆடக்கூடும். ஆனால், அணியின் தவறுகளையும் பலவீனங்களையும் மறைக்க வரலாற்றைப் புரட்டிப் பேசும் வேலையில் அணி நிர்வாகம் இறங்கக் கூடாது.

முதலிடம் என்னும் மரியாதை

கோலியின் ஆட்டம், புஜாரா, ரஹானே ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடியது, கடைசி நாளில் ராகுலும் பந்த்தும் அடித்த அபாரமான சதங்கள் என்று சில விஷயங்கள் இந்த்த் தொடரில் ஆறுதலளித்தாலும், பந்து வீச்சாளர்களின் உழைப்பை மட்டையாளர்கள் வீணடித்துவிட்டார்கள் என்பதே இந்தத் தொடரின் சாரமான செய்தி. தொடரின் பெரும்பாலான இன்னிங்ஸ்களில் இங்கிலாந்து மட்டையாளர்களை இந்தியப் பந்து வீச்சாளர்கள் கடுமையாகச் சோதித்தார்கள். சில சமயம் கடை வரிசை மட்டையாளர்களை விரைவில் வீழ்த்த முடியாமல் தவித்தாலும் ஒட்டுமொத்தமாக அவர்களுடைய செயல்பாடு பாராட்டத்தக்க விதத்தில் இருந்தது. மட்டையாளர்களும் தங்கள் செயல்திறனைக் கூட்டிக்கொண்டால் நவம்பரில் தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியத் தொடரில் அதிக வெற்றிகள் கிடைக்கலாம்.

அப்படிக் கிடைத்தால்தான் டெஸ்ட் அரங்கில் முதலிடம் என்னும் பெருமைக்கு மரியாதை கூடும்.

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon