மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: காரக் கொழுக்கட்டை!

கிச்சன் கீர்த்தனா:  காரக் கொழுக்கட்டை!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இனிப்புக் கொழுக்கட்டை, பூரணக் கொழுக்கட்டை, உளுந்துக் கொழுக்கட்டை வகைகள் எல்லாம் பார்த்தாச்சு. இனிப்பு வகைகளை மட்டுமே பார்த்தால் எப்படி, கொஞ்சம் காரமும் தேவைதானே? அந்த வகையில், கொஞ்சம் வித்தியாசமாகக் காரக் கொழுக்கட்டை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..

தேவையானப் பொருட்கள்

இட்லி அரிசி – 2 கப் அல்லது (பச்சரிசி, பாஸ்மதி அரிசி வேண்டாம்)

தேங்காய்த் துருவல் – 1 கப்

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

உளுந்து – 1 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை

முதலில் இட்லி அரிசியை நன்கு கழுவி 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

அதன்பின் மிக்ஸியில் அரிசி, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

(காரம் அதிகம் வேண்டுமானால் 2 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.)

பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். தாளித்த வாணலியில் அரைத்த மாவை கொட்டி நன்கு கிளறவும்.

மாவு நன்கு கெட்டியானவுடன் இறக்கி விடவும்.

மாவு ஆறிய பிறகு உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் வேகவிடவும். சூடாக எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு

இந்தக் கொழுக்கட்டையை ஸ்நாக்ஸாக (பலகாரமாக) மட்டுமல்ல; இரவு நேர உணவாகவும் சாப்பிடலாம்.

இதற்குத் தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.

வாசகர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்!

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon