மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

யாரோ எழுதிய அறிக்கை: ஸ்டாலினை விமர்சித்த தங்கமணி

யாரோ எழுதிய அறிக்கை: ஸ்டாலினை விமர்சித்த தங்கமணி

யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி.

தமிழக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். நேற்று (செப்டம்பர் 12) அமைச்சர் தங்கமணியின் மின் துறையைக் குறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள், முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

மின் தேவையைச் சமாளிக்க 'பராமரிப்பு', 'ஃபால்ட்' என்ற போர்வையில் மின்வெட்டுகளை அமல்படுத்துங்கள் என்று வாய்மொழி உத்தரவு போயிருப்பதாகவும், அதை முன்னிட்டே தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டுகள் அரங்கேறி வருவதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் சென்னையில் நேற்று (செப்டம்பர் 12) செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி. “யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். மத்தியத் தொகுப்பிலிருந்து நமக்கு வர வேண்டிய மின்சாரம் 6,152 மெகாவாட். ஆனால், அவர்கள் கொடுப்பதோ 3,334 மெகாவாட் மட்டும்தான். திடீரென்று காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்ததால், சில இடங்களில் அரைமணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது” என்று அவர் விளக்கம் அளித்தார்.

“தமிழகத்தில் மின்வெட்டைக் கண்டுபிடித்தது திமுகதான் என்பது அனைவருக்கும் தெரியும், திமுக ஆட்சியில் இருந்தபோது மின் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமியே கூறியிருக்கிறார். அவ்வாறான நிலையில் மின் துறையில் ஊழல் நடப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர். 2015ஆம் ஆண்டிலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதை போல மின்வெட்டு என்ற சூழ்நிலையே இல்லை.

குறிப்பாக நிலக்கரி கொள்முதலில் 12,350 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். 12,350 கோடி ரூபாய்க்குத்தான் நிலக்கரி வாங்கப்பட்டது. அதைக் கூட சரிபார்க்காமல் யாரோ ஒருவர் எழுதிக் கொடுப்பதை ஸ்டாலின் அறிக்கையாக வெளியிடுகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார் தங்கமணி.

“பணியிட மாறுதல்களிலும் பெரிய அளவில் ஊழல் நடப்பதாகவும், அதனால் பணிகள் முறையே நடப்பதில்லை என்றும் கூறுகின்றனர். நான் மின் துறை அமைச்சரானதிலிருந்து இன்று வரை, சாதாரண வயர்மேனிலிருந்து இயக்குநர்கள் வரை யாராவது பணம் கொடுத்துப் பணிக்கு வந்திருக்கிறார்கள் என்றால், அதற்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு சாமானிய ஆட்சி நடைபெறுகிறது என்பதை, அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஸ்டாலினால் முதலமைச்சராக முடியவில்லை என்ற காரணத்தால், ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்” என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் தங்கமணி.

2001-2006 ஆட்சியில் தேவைக்கு அதிகமாக மின்சாரம் இருந்த காரணத்தால் கர்நாடகாவுக்குத் தமிழ்நாடு மின்சாரம் வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார். “2006இல் திமுக ஆட்சிக்கு வந்தது. 2007ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாக அவர்களே கூறியுள்ளனர். 2007ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை, திமுக ஆட்சியில் 8 மணி நேரம்தான் மின்சாரம் இருந்தது. மின்சாரம் வந்தாலே அதிசயம் என்ற நிலை இருந்தது.

மின்வெட்டு குறித்து தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை அழைத்துள்ளேன். நமக்கு தற்போது 14,500-15,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் பெற்றுள்ளோம். அனல்மின் நிலையத்தில் முழுமையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பற்றாக்குறைக்கு மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கிறோம். வடசென்னையில் நிலக்கரி இல்லாமல் உற்பத்தியை நிறுத்தி வைக்கவில்லை. பழுது ஏற்பட்டதால்தான், அங்கு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் அங்கு உற்பத்தியைக் கொண்டுவந்துவிடுவோம். தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு மின்சாரம் உள்ளது. ஸ்டாலின், தினகரன் மற்றும் பத்திரிகைகள் கூறுவதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்பதை நான் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறினார்

குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக டெண்டர் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதாகத் தெரிவித்தார். “டெண்டர்கள் வெளிப்படையாக விடப்படுகின்றன. டெண்டர் விதிமுறைகளில் எந்தத் தவறும் கிடையாது. இ-டெண்டர் கொண்டுவரப்பட்டதிலிருந்து ஏதாவது தவறு நடந்திருந்தால் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார் தங்கமணி.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon