மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

நிலத்தடி நீர்: அரசு பதிலளிக்க உத்தரவு!

நிலத்தடி நீர்: அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழகம் முழுவதும் அனுமதியில்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்பவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னையை அடுத்த பொன்னேரி அருகில் உள்ள வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் சட்டவிரோதமாக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி, அதிகத் திறன் கொண்ட மோட்டார்களால் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி ஏதும் பெறவில்லை. இவ்வாறு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் வல்லூர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது

இது குறித்து, முதல்வரின் தனிப்பிரிவுக்குக் கடந்த 2017ஆம் ஆண்டு மனு அளிக்கப்பட்டது. அதன்பின் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். விதிகளை மீறி நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் எடுத்துச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரினார் ராஜேஷ்குமார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் கிராமத்தில் நிலத்தடி நீரை முறைகேடாக எடுக்கப் பயன்படுத்திய அதிகத் திறன் கொண்ட மோட்டார்களை ஐந்து பேரிடம் இருந்து பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பதில் மனுவைப் படித்த நீதிபதிகள், அனுமதி இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது ஏன் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர். “நீரை எடுத்துச் செல்லும் லாரிகளை மட்டும்தான் தாசில்தார் பிடிப்பதற்கு அனுமதி உள்ளது. அவர்களின் மீதான நடவடிக்கைகளை வட்டார வருவாய் அதிகாரிதான் எடுக்க முடியும்” என அரசு தரப்பில் இதற்குப் பதிலளிக்கப்பட்டது.

அதற்கு, நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அனுமதியில்லாமல் நீரை எடுப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்று மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனுமதியில்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

“தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனுமதி இல்லாமல் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீரை எடுத்து லாரிகள் மூலம் விற்பவர்கள் மீது இதுவரை எத்தனை குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும், தமிழக அரசு வரும் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon