மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 25 பிப் 2020

சிறப்புப் பார்வை: ஆள்கடத்தல் என்னும் பயங்கரம்!

சிறப்புப் பார்வை: ஆள்கடத்தல் என்னும் பயங்கரம்!

பா.சிவராமன்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான மாபெரும் தாக்குதலாக உருவெடுத்திருக்கும் ஆள்கடத்தலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இயற்றியுள்ள சட்டம் குறித்த பார்வை

“11 வயதுச் சிறுமி தாரா அவளுடைய கிராமத்திலிருந்து கடத்தப்பட்டு கொத்தடிமையாக விற்கப்பட்டு அவளுடைய எஜமானரால் அடித்து உதைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்படுவாளென்றால் அவளை நாம் எப்படிக் காப்பாற்றுவது?”

“ஒரு பெண் திருமணத்திற்காக 45 வயது ஆணுக்கு விற்கப்பட்டு மாதக்கணக்கில் தினந்தோறும் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்படுகிறாள் என்றால் அவளை நாம் எப்படிக் காப்பாற்றுவது?”

மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி அவர்களின் இந்த உருக்கமான கேள்விகளையடுத்து 26 ஜூலை 2018 அன்று ஆள்கடத்தல் மசோதாவை மக்களவை நிறைவேற்றியது. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் ஒரு மைல்கல்லாகும். கொத்தடிமை முறை போன்ற கட்டாய உழைப்புக்கு இது மேலும் ஒரு பலத்த அடி என்று சொல்லலாம். இம்மசோதாவின் முழுப்பெயர் ஆள்கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு அளித்தல்) மசோதா, 2018 (The Trafficking of Persons (Prevention, Protection and Rehabilitation) Bill, 2018) ஆகும்.

ஆள்கடத்தலின் வகைகள்

வெளியூர்களில் பிச்சை எடுக்க வைப்பதற்காகக் குழந்தைகளைக் கடத்திச் செல்வது, வன்புணர்ச்சிக்காகவும் இதர வடிவங்களிலான பாலியல்ரீதியான சுரண்டலுக்கும் பெண்களையும் குழந்தைகளையும் கடத்திச் செல்வது, உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளுக்கோ கொத்தடிமைகள் போல் வீட்டு வேலை செய்ய வைக்கவும் தொழிற்கூடங்களிலோ அல்லது பண்ணைகளிலோ வலுக்கட்டாயமாகப் பணிபுரிய வைக்கவும் திருமணத்துக்காகவோ அல்லது பிள்ளை பெற்றுத்தர வைப்பதற்காகவோ, விற்பனைக்கோ அல்லது சொந்த உபயோகத்திற்கோ, நபர்களைக் கொண்டு செல்வது ஆள்கடத்தல் (trafficking) என்று வரையறுக்கப்படுகிறது.

இந்தியக் குற்றவியல் சட்டம் (IPC) பிரிவு 370 ஆள் கடத்தலை வரையறுத்துள்ளபடியே இந்த மசோதாவும் வரையறுத்திருந்தாலும், வலுக்கட்டாயமாக உழைப்பில் ஈடுபடுத்துவதற்கோ, பிச்சை எடுக்கவைப்பதற்கோ, திருமணம் செய்துகொள்வதற்கோ அல்லது பிள்ளை பெற்றுத்தரவோ நபர்கள் கடத்தப்படுவது; மயக்க மருந்தோ அல்லது போதை மருந்தோ கொடுத்து கடத்துவது ஆகியன 'தீவிர வடிவங்களிலான ஆள்கடத்தலாக' (Aggravated forms of trafficking) இந்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. இத்தகைய தீவிர வடிவிலான ஆள்கடத்தலுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படவும் இச்சட்டம் வகைசெய்கிறது.

மேற்கண்ட குற்றங்களைக் கையாளக் குற்றவியல் சட்டம், 1860 (IPC) மற்றும் ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்பு சட்டம், 1956, சிறுவர் நீதி (சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015, கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் 1976, மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயரும் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை விதிமுறைகள்) சட்டம், 1979, குழந்தை தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் தடை) சட்டம், 1986 ஆகிய சட்டங்களில் இடமிருந்தாலும் இக்குற்றங்களுக்கான பிரத்யேகமான ஒரு சட்டத்திற்கான அவசியத்தை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தினார்.

தேசியக் குற்றப் பதிவுகள் ஆணையத்தின் (NCRB) புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி, 2015இல் குழந்தைகளும் பெண்களும் கடத்தப்பட்ட குற்றங்கள் 15,448ஆக இருந்தது. 2016இல் அது 19,223ஆக அதிகரித்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் நாடெங்கிலும் 1,11,569 குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்கள் சுரண்டலுக்காகக் கடத்திச்செல்லப்பட்டிருப்பதாக அனுமானிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி, ஒரு சிறப்பு சட்டத்துக்கான அவசியத்தை அவர் வலியுறுத்தியதை அடுத்து எதிர்க்கட்சியினர் பலரின் ஆதரவுடன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையிலும் இது எளிதில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட பின்னணி

28 பிப்ரவரி 2018 அன்றுதான் மத்திய அமைச்சரவை ஆள்கடத்தல் சட்ட முன்வடிவை ஆமோதித்தது. அதன் பின்னர் 2018 மே மாதத்தில்தான் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை 18 அன்றுதான் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இந்த மசோதா சேர்க்கப்பட்டது. பின்னர் பத்தே நாட்களுக்குள் இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது ஊடகங்களில் பரவலாக ஆச்சரியத்தை எழுப்பியுள்ளது. ஆனால், இந்த மசோதாவுக்கு நீண்ட பின்னணி இருப்பதும் உச்ச நீதிமன்றத்தின் உந்துதலாலேயே இது விரைவில் சட்டமாகிறது என்பதும் பலருக்குத் தெரியாது.

2002–2003ஆம் ஆண்டுகளில் தேசிய மனித உரிமை ஆணையம் இப்பிரச்சினையை ஆராய்ந்து 'இந்தியாவில் பெண்களும் குழந்தைகளும் கடத்தப்படுதல்' என்ற தலைப்பில் இரு பெரும் தொகுதிகளில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அடிப்படையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்பு சட்டம், 1956ஐ 2006இல் திருத்தியது. அதேபோல 2013இல் நாட்டை உலுக்கிய நிர்பயா சம்பவத்தையடுத்து நீதிபதி வர்மா கமிட்டி அளித்த அறிக்கையின் பேரில் குற்றவியல் திருத்தத் சட்டம் 2013 நிறைவேற்றப்பட்டு ஆள்கடத்தலுக்கும் ஆள்கடத்தலுக்கு பலியானவர்கள் சுரண்டப்படுவதற்கும் பாலின வன்கொடுமைகளுக்கு எதிராக முறையே பிரிவு 370, 370A ஆகியவை சேர்க்கப்பட்டன. ஆனால், இக்குற்றங்களைத் தடுக்க இவை போதுமானவை அல்ல எனப் பரவலாகக் கருதப்பட்டது.

இப்பின்னணியில், ஆள்கடத்தல் சம்பந்தப்பட்ட மனு ஒன்றை விசாரிக்கையில் (Prajwala v Union of India W.P(C) No. 56 of 2004), இதற்கென தனியாக சிறப்புச் சட்டம் இயற்றுவது குறித்து அரசிடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டபோது மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் இப்போது நிலவும் சட்டங்களை படித்தாராயவும் அவற்றிலுள்ள இடைவெளிகளைக் கண்டறியவும் ஆள்கடத்தல் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சட்ட முன்வரைவு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காகவும் கமிட்டி ஒன்றை அமைத்திருப்பதாகக் கூறியதை உச்ச நீதிமன்றம் தனது டிசம்பர் 9, 2015 ஆணையில் குறிப்பிட்டிருந்தது. இதன் பின் அமைச்சகம் பல முன்வரைவுகளை விவாதத்திற்காகச் சுற்றுக்கு விட்டது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இந்த மசோதா குற்றத் தடுப்பு மட்டுமின்றி இக்குற்றங்களுக்குப் பலியானவர்களை மீட்பது மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

கடத்தல் வழக்குகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் தேசியக் கடத்தல் எதிர்ப்பு ஆணையம் ஒன்றை நிறுவுவதை இந்த மசோதா முன்வைக்கிறது.

இந்த மசோதா, நிவாரண மற்றும் மறுவாழ்வளிப்புக் கமிட்டியை அமைப்பதற்கும், மறுவாழ்வு நிதிக்கும் வழிவகை செய்கிறது.

குற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ள அல்லது பயன்படுத்தவிருக்கும் சொத்துகளைப் பறிமுதல் செய்வதையும் முன்வைக்கிறது.

“ஆள்கடத்தல் என்பது எல்லைகளைக் கடந்த ஒரு குற்றம். ஆனால், எந்த எல்லைக்குள் நடந்தது என்ற பிரச்சினைகள் புலனாய்வுக்குக் குறுக்கே வருகின்றன. இந்தப் பிரச்சினைகளை திறம்பட எதிர்கொள்ள இந்த மசோதா இடமளிக்கிறது” என்று அமைச்சர் மேனகா காந்தி இதன் மீதான விவாதத்தின்போது விளக்கினார்.

இச்சட்டம் பரவலான வரவேற்பைப் பெற்றாலும், சில அம்சங்கள் குறித்து சில சிவில் சமூகக் குழுவினரின் விமர்சனத்தையும் சந்தித்துள்ளது.

முக்கிய விமர்சனங்கள்

2011இல், புத்ததேவ் கர்மகர் எதிர் மேற்கு வங்க அரசாங்கம் வழக்கில் பதிவு செய்யப்பட்ட அப்பீல் ஒன்றை விசாரிக்கையில், உச்ச நீதிமன்றம் பின்வரும் விஷயங்களில் உள்ள சட்டப் பிரச்சினைகளைப் பரிசீலிக்கக் குழு ஒன்றை அமைத்தது: 1) ஆள்கடத்தல் தடுப்பு, 2) பாலியல் தொழிலை விட விரும்பும் பாலியல் தொழிலாளர்களின் மறுவாழ்வு, 3) இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21இன்படி பாலியல் தொழிலாளர்கள் சுயமரியாதையுடன் வாழத் தகுதியான நிலைமைகள். அடுத்த சில ஆண்டுகளில் இக்குழு தனது பரிந்துரைகளை முன்வைத்தது.

அவற்றுள் முக்கியமான ஒன்று கடத்தப்பட்ட பெண்ணை, அரசு நடத்தும் "இல்லங்களில்" தங்க வைக்காமல் உள்ளூர் சமூகம் மத்தியிலேயே அவருக்கு மறுவாழ்க்கையளிப்பது. மற்றொரு முக்கியப் பரிந்துரை பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துபவரையும் தாமாகவே முன்வந்து அதில் ஈடுபடுபவரையும் வித்தியாசப்படுத்துமளவுக்கு ITPA சட்டத்தைத் திருத்துவது.

உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவின் பரிந்துரைகளைக் கூட இந்தச் சட்டம் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. இந்த இரு முக்கிய விஷயங்கள் குறித்த பரவலான விமர்சனங்கள் போக இன்னும் சில விமர்சனங்களை எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி வார இதழில் ஜூலை 14 மற்றும் 21 தேதிகளில் வெளிவந்த இதழ்கள் 28 மற்றும் 29 ஆகியவற்றில் இச்சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான ஏழு கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

மக்களவையில் இச்சட்ட முன்வடிவு விவாதத்துக்கு வந்தபோது, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இவ்விமர்சனங்களை எழுப்பி இச்சட்ட முன்வரைவைப் பரிசீலிக்க இதை நாடாளுமன்றக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரினர். ஆனால், ஆள்கடத்தலுக்குப் பலியானவர்களை இச்சட்டம் இலக்காகக் கொள்ளாது என அமைச்சர் மேனகா காந்தி வாய்மொழியாக வாக்குறுதியளித்தார். அப்படியே சில கோளாறுகள் இருக்குமேயானால் அவற்றை இச்சட்டத்தின் கீழ் விதிகளை உருவாக்குகையில் சரிசெய்வோம் என்றும் வாக்களித்தார்.

அமைச்சரின் வாய்மொழி வாக்குறுதியை எப்படி நம்புவது, நாளை மத்திய அரசோ அல்லது எந்த மாநில அரசோ மீண்டும் நாடாளுமன்றம் செல்லாமலே வெறும் நிர்வாகத் துறை ஆணையின் மூலமாகவே விதிகளை மாற்ற முடியும் என்கின்றனர் சில சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்கள்.

சட்டம் முற்போக்கான சட்டம்தான். ஆனால், போலீஸையும் நிர்வாகத்தையும் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இல்லங்களையும் அளவுக்கு மீறி சார்ந்திருப்பது அப்பாவிகள் பழிவாங்கப்படுவதற்கும் முசாஃபர்பூர் போன்ற கோர சம்பவங்கள் எங்கும் நிகழ்வதற்கும் வழிவகுக்குமோ எனவும் செயற்பாட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon