மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

எட்டு வழிச் சாலைத் திட்ட மாற்றங்கள் ஏமாற்று வேலை: அன்புமணி

எட்டு வழிச் சாலைத் திட்ட மாற்றங்கள் ஏமாற்று வேலை: அன்புமணி

எட்டு வழிச் சாலை திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றம் என்பது ஏமாற்று வேலையே என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் - சென்னை இடையே எட்டு வழிச் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தநிலையில் எட்டு வழிச் சாலை திட்டத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “எட்டு வழிச் சாலை அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட தொகையான ரூ.10 ஆயிரம் கோடியிலிருந்து 7 ஆயிரத்து 210 கோடியாகக் குறைக்கப்படுகிறது. கல்வராயன் மலையைப் பாதிக்காதவாறு செங்கம் - சேலம் சாலை மாற்றியமைக்கப்படுகிறது.

வனப்பகுதியில் திட்டமிடப்பட்ட 300 ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக 103 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வனப்பகுதியில் 13.2 கிமீ தூரம் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 கிமீ குறைக்கப்பட்டுள்ளது.

எட்டு வழிச் சாலையின் அகலம் 90 மீட்டர் என்பது 70 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் சாலையின் அகலம் 70 மீட்டரிலிருந்து 50 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது” என்று நேற்று முன்தினம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், எட்டு வழிச் சாலை திட்ட மாற்றங்கள் என்பது ஏமாற்று வேலை என்று குறிப்பிட்டு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி நேற்று (செப்டம்பர் 12) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்களின் அளவு 2 ஆயிரத்து 125 ஏக்கர் குறையும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. மாறாக இந்த மாற்றம் என்பதே மக்களை ஏமாற்றுவதற்கான சதித் திட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலை அமைக்கப்போவதாக அறிவித்திருந்த நெடுஞ்சாலைகள் ஆணையம், இப்போது முதல்கட்டமாக ஆறு வழிச்சாலை அமைத்து விட்டு, அடுத்தகட்டமாக அதை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக ஆறு வழிச் சாலைக்கு மட்டும் நிலத்தைக் கையகப்படுத்தலாம்; அதன்மூலம் மக்களின் கோபத்தை ஓரளவாவது கட்டுப்படுத்தலாம் என்பதுதான் அரசின் திட்டம் என்று குற்றம்சாட்டியுள்ளார் அன்புமணி.

எட்டு வழிச் சாலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக செங்கல்பட்டு - காஞ்சிபுரம், போளூர் -திருவண்ணாமலை, சேத்பட் - செம்மம்பாடி ஆகிய மூன்று இடங்களில் 50.7 கிமீ தொலைவுக்கு இணைப்புச் சாலை அமைக்கும் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. அதனால், அந்தப் பகுதிகளில் 642 ஏக்கரைத் தமிழக அரசு தனியாக கையகப்படுத்தப்படவுள்ளது. இதனால் விவசாயிகளுக்குப் பயனில்லை.

இது தவிர எட்டு வழிச் சாலைத் திட்டத்தில் முதல்கட்டமாக ஆறு வழிச் சாலை மட்டுமே அமைக்கப்படுவதால், இத்திட்டத்திற்காகக் கையகப்படுத்த உத்தேசித்திருந்த 2 ஆயிரத்து 560 ஹெக்டேரில் நான்கில் மூன்று பங்கான ஆயிரத்து 941 ஹெக்டேர் மட்டும், அதாவது 4 ஆயிரத்து 852 ஏக்கர் நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்படவுள்ளது. இம்மாற்றத்தால் கையகப்படுத்தப்படும் நிலங்களின் அளவு கால்வாசி மட்டும்தான் குறைந்துள்ளதே தவிர, நிலங்களைப் பறி கொடுக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை குறையாது.

இத்தகைய நாடகங்களைக் கண்டு பாமகவோ, விவசாயிகளோ ஏமாற மாட்டார்கள். சென்னை - சேலம் சாலைக்கு எதிரான சட்டப் போராட்டமும், அரசியல் போராட்டங்களும் தொடரும். மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் நலனில் சிறிதளவாவது அக்கறை இருந்தால் இது போன்ற நாடகங்களை நடத்துவதற்குப் பதிலாக பசுமைச் சாலைத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon