மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

அழிவின் விளிம்பில் இருக்கும் முக்கிய நகரம்!

“மிகக் கடுமையான மழைப்பொழிவு மற்றும் வானிலை நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றங்களினால் பாங்காக் நகரத்தின் 40 சதவிகிதம் 2030ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் மூழ்கிவிடும்.”

- உலக வங்கி அறிக்கை

உலகின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் பாங்காக், சரியாக 10 ஆண்டுகளில் நீரில் மூழ்கும். 12 ஆண்டுகளில் சுத்தமாக அழியும் என்று உலகச் சுற்றுச்சூழல் அமைப்பான க்ரீன்பீஸ் தெரிவித்துள்ளது.

பாங்காக் எவ்வளவு முக்கியமான நகரம் என்றால், அடுத்த ஆண்டு இறுதியில் போலந்தில் நடைபெறவிருக்கும் ஐநா காலநிலை மாநாட்டுக்கு முன் தயாரிப்பாக தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில்தான் கடந்த வாரம் காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில்தான் முதன்முதலாகச் சுற்றுச்சூழலுக்கான சர்வதேசக் குரல் எழுப்பப்பட்டது என்பதை இதே பகுதியில் விவாதித்திருந்தோம்.

தாய்லாந்து வளைகுடாவுக்கு அருகில் உள்ள கடல்களின் நீர் மட்டம் வருடத்துக்கு 4 மிமீ அளவுக்கு உயர்ந்து வருகிறது. உலக அளவில் உள்ள சராசரி கடல் மட்ட உயர்வைவிட இது மிக அதிகம். பாங்காக் நகரம் கட்டமைக்கப்பட்டதே சதுப்பு நிலத்தின்மீதுதான். எனவே, அதன் அடிப்படைக் கட்டுமானம் என்பதே தவறானது. அதுவும் கடல் மட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரத்திலிருக்கும் சதுப்பு நிலத்தை அடித்தளமாக வைத்து எழுப்பட்ட நகர நிலம் பாங்காக். எனவே இயல்பாகவே கடல் நீர் நிறையும் நிலமாகவே இது இருக்கிறது.

ஏற்கெனவே 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாங்காக் நகரத்தின் ஐந்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. அதுவும் பாங்காக்கில் மட்டும்தான் இந்தப் பாதிப்பு இருந்தது. தாய்லாந்தின் மற்ற பகுதிகள் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் சதுப்பு நிலத்தின் அடிப்படைத் தன்மையே கடல்நீரை உள்வாங்கிச் செரித்து நன்னீராக்கிச் சேமித்து வைப்பதுதான்.

கடற்கரை குறித்த அறிவியலைச் சரியாகப் புரிந்துகொள்ளாததும், நகரமயமாக்கலின் பேராசையும்தான் பாங்காக்கின் மிக அதிகமான பாதிப்புகளுக்குக் காரணம். பாங்காக் நகரத்தின் வளர்ச்சிக்காக இயற்கைச் சூழல் மிக மோசமாகப் புறந்தள்ளப்பட்டது.

இந்நிலையை அறிந்த பாங்காக்கின் மிகப் பெரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடு என்ன தெரியுமா? 2600 கிலோமீட்டர் தூரத்துக்குக் கால்வாயைக் கட்டியெழுப்பியது. வெள்ளம் வந்தால் வடிவதற்கான ஏற்பாடாக இதைச் செய்துள்ளனராம். இதனால் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்த பின்னர், பாரிஸ் ஒப்பந்தத்தின்படி ஐநாவிடம் வெள்ள நிவாரணத்தின்போது பொருளாதார ரீதியாக தங்களுக்கு உதவ வேண்டும் என்று பணக்கார நாடுகளுக்கு இப்போதே வேண்டுகோள் விடுத்திருக்கிறது பாங்காக் மாநகராட்சி நிர்வாகம்.

அடிப்படையான செயல் மாற்றமும், மன மாற்றமும் இல்லாமல் வெறும் நிவாரண நடவடிக்கையால் அழிவைத் தடுக்க முடியாது எனும் பாடத்தை பாங்காக் விரைவில் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் மிக மோசமான அனுபவத்திலிருந்து அந்தப் பாடத்தைக் கற்க வேண்டியிருக்கும்.

- நரேஷ்

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon