மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

இன்று விநாயகர் சதுர்த்தி!

இன்று விநாயகர் சதுர்த்தி!

நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 13) விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கொண்டாட்டம் ஏன்?

சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் பல வரங்களைப் பெற்றிருந்ததால், தேவர்களைத் துன்புறுத்தி வந்துள்ளார். கஜமுகாசுரனைத் தேவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையடுத்து, ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும் மனித உடலோடும் படைத்து, கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார் சிவபெருமான்.

கஜமுகாசுரனுக்கும் விநாயகருக்கும் இடையே நடைபெற்ற போரில், விநாயகர் வெற்றி பெற்றார். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தியானது விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக புனேவில் உள்ள விநாயகர் கோயிலில்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.

சிலைகள் தயாரிப்பு

இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு 15 வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிலைகள் அனைத்தும் 6 அடி வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் ரூ.200 முதல் ரூ.12,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. ராஜ விநாயகர், பார்வதி -சிவன் விநாயகர், ஜல்லிக்கட்டு மற்றும் பைக் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று கோயம்பேடு சந்தைக்குக் காய்கறி, பூக்கள், பழங்களின் வரத்து அதிகரித்தது. அதே சமயத்தில் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

அரசு அனுமதி

தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகளோடு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, இன்று மாநிலம் முழுவதும் அச்சிலைகள் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2,500 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் வரும் 16ஆம் தேதியன்று விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று காவல் துறை தெரிவித்துள்ளது. விநாயகர் சிலைகளைக் கரைக்கும்போது பூக்கள், துணிகள் மற்றும் அலங்காரப்பொருட்களை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திருப்பூர் மாவட்டத்திலும் 2,000 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon