மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

சிறப்புக் கட்டுரை: இது ஒட்டுமொத்தச் சமூகத்தின் பிரச்சினை!

சிறப்புக் கட்டுரை: இது ஒட்டுமொத்தச் சமூகத்தின் பிரச்சினை!

தேவிபாரதி

சமீபத்தில் நான் சந்தித்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆசிரியப் பணி சவாலானதாக மாறிக்கொண்டிருக்கிறது எனச் சொன்னதைக் கேட்டபோது அது எனக்கு அதிர்ச்சியூட்டவில்லை. கடந்த வாரம் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களில் சிலர் அரசுப் பேருந்து ஒன்றில் பட்டாக் கத்தியுடன் பயணம் செய்ததையும் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்டதையும் பற்றிய செய்தி பெற்றோருக்கும் சமூக அக்கறை கொண்டவர்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரைக் காவலர்கள் முன்னிலையிலேயே அவரது பெற்றோர் தாக்கிய காட்சித் துண்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கானவர்களால் பார்வையிடப்பட்டது, பலர் அந்த மாணவனைத் தாக்கிய அவரது பெற்றோரின் செயலை வரவேற்றிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் படிக்கட்டில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவன் ஒருவனை நடத்துநர் தாக்கியதை யாரும் கண்டித்ததாகத் தெரியவில்லை.

வகுப்பறைகளில் மாணவர்கள் மோதிக்கொள்கிறார்கள், ஒருவரையொருவர் தாக்கிக்கொள்கிறார்கள். குழுவாக ஒன்று திரண்டு பொதுவெளிகளில் சண்டையிட்டுக்கொள்கிறார்கள், வகுப்பறைகளிலேயே தூக்கிலிட்டுக்கொள்கிறார்கள். அப்படி நடக்கும்போது சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. திட்டியது, அடித்தது அல்லது பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் ஆசிரியர்கள் மீது வைக்கப்படுகின்றன. பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் பள்ளி முற்றுகையிடப்படுகிறது, யாராவது ஓர் ஆசிரியர் குற்றம் சுமத்தப்படுகிறார், அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியர் தாக்குதலுக்குள்ளாகிறார். காவல் துறை வரவழைக்கப்படுகிறது, கல்வி அதிகாரிகள் வருகிறார்கள். குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்வதாகவும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மறுநாளே பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள். துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்படுகிறது. ஆனால், பல நிகழ்ச்சிகளில் அதுபோன்ற நடவடிக்கைகள் தீர்வாக இருப்பதில்லை. அடுத்த சில மாதங்களில் அதே பள்ளியில் அதே போன்ற ஒரு தற்கொலை.

குழந்தைகளைப் பீடித்துள்ள நோய்க்கூறுகள்

நிலைமை கையை மீறிப்போய்க்கொண்டிருக்கிறது என்கிறார் அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் எனது நண்பர். அவர் ஓர் எழுத்தாளர். தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். மாணவர்களின் கல்வி உரிமை, மாணவர்-ஆசிரியர் உறவு, ஒழுக்கம் சார்ந்து திடமான பார்வைகளைக் கொண்டவர், ‘நம் சமூகத்தைச் சூழ்ந்துள்ள நோய்க்கூறுகள் குழந்தைகளைப் பீடித்துள்ளன. அவர்கள் அவற்றின் பிடியிலிருந்து மீள முடியாதவர்களாக இருக்கிறார்கள்‘ என அவர் சொன்னதைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

மாணவர்களில் சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள். வகுப்பறைகளிலேயே குடிக்கிறார்கள். சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளிகள் வகுப்பறையில் குடித்த மாணவர்களில் சிலர் மீது நடவடிக்கை எடுத்தது பற்றிய செய்திகள் வந்தன. ஒன்று தனியார் பள்ளி, மற்றொன்று அரசுப் பள்ளி. கோவை மாவட்டப் பள்ளியொன்றில் அதுபோன்ற குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் மாணவிகள்.

தனியார் பள்ளிகளின் கண்டிப்பான சூழல்

தனியார் பள்ளி நிர்வாகங்கள் இதுபோன்ற நேர்வுகளில் கடுமையாக நடந்துகொள்ள முயல்கின்றன. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு எச்சரிக்கப்படுகின்றனர். குற்றச்சாட்டுக்குள்ளான மாணவர்களைத் தனி அறையில் வைத்து அடித்து உதைத்த நிகழ்ச்சிகளும் உண்டு. தனியார் பள்ளிகள் அத்துமீறும் மாணவர்களைப் பள்ளியை விட்டு நீக்கிவிடவும் செய்கின்றன. சம்பந்தப்பட்ட பெற்றோர்களால் எதுவுமே செய்ய முடியாது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிகார பலம் கொண்டவை. புகழ்பெற்ற சில தனியார் பள்ளிகள் மாணவ மாணவிகளை அடிப்பதைத் தமக்கான சிறப்புத் தகுதியாகவே கொண்டுள்ளன.

இப்போது அதுபோன்ற கண்டிப்பான பள்ளிகளையே பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். சேர்க்கையின்போதே மாணவர்களும் பெற்றோர்களும் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள்.

பல தனியார் பள்ளிகள் விதிக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால் மூச்சு முட்டுகிறது. உடைக் கட்டுப்பாடு, நேரக் கட்டுப்பாடு, ஒழுக்கம், அலைபேசிப் பயன்பாட்டுக்கான தடை எனப் பல கட்டுப்பாடுகள். மாணவர்கள் என்ன வகையான உணவு உட்கொள்ள வேண்டும் என்பதைக்கூட அவர்களே தீர்மானிக்கிறார்கள். தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற கலவை சாதங்களை மாணவர்களுக்குக் கொடுத்தனுப்பக் கூடாது என்பது பல தனியார் பள்ளிகள் விதிக்கும் பொதுவான நிபந்தனைகளில் ஒன்று. இருபாலருக்கான தனியார் பள்ளி மாணவர்கள் மாணவிகளுடன் பேசுவதையும் அவர்களோடு நட்பு பாராட்டுவதையும் தடை செய்திருக்கின்றன. அதற்கெல்லாம் அனுமதித்தால் காதலில் விழுந்துவிடுவார்கள் என எச்சரிக்கின்றன அந்தத் தனியார் பள்ளிகள்.

பள்ளிக்கூடத்தில் காதல்

பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையேயான காதல் பல சிக்கல்களுக்குக் காரணமாக இருப்பதாக ஆசிரியர்கள் கருதுகிறார்கள். கல்வியில் நாட்டம் குறைவது தவிர, பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். பதின்பருவச் சிக்கல்கள் அவற்றில் முக்கியமானவை. காதல் பற்றிய கற்பிதங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ரகசியமான சந்திப்புகளுக்கு முயல்கிறார்கள். திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், உணவு விடுதிகள் முதலான இடங்களில் சந்தித்துக்கொள்கிறார்கள், ஆசிரியர், பெற்றோரிடமிருந்து இருந்து எழும் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகச் சில சமயம் வீட்டை விட்டு ஓடிப்போகும் அளவுக்குக்கூடத் துணிந்துவிடுகிறார்கள். வாழ்வை எதிர்கொள்வதற்கான வயதோ, பக்குவமோ, சமூகப் பொருளாதார அடித்தளங்களோ அற்ற அந்தப் பருவங்களில் தோன்றும் காதல் அவர்களை முற்றாகச் சிதைத்துவிடுகிறது.

பள்ளிகளில் வலியுறுத்தப்படும் கட்டுப்பாடுகள் மாணவர்களின் எதிர்கால நலன் கருதும் செயல்பாடுகள் என்பது பல கல்வி நிறுவனங்களின் கருத்தாக இருக்கிறது. அவற்றை மீறி சாகசங்களில் ஈடுபட முற்படுகிறார்கள் மாணவர்கள்.

விபரீத சாகசம்

சாகச உணர்வே அத்துமீறலுக்கும் வன்முறைக்குமான காரணங்களாக அமைந்துவிடுகிறது. ஓரிரு வாரங்களுக்கு முன்னால் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம்.

பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவன் ஒருவன் தன் சக மாணவனைத் தோளுக்கு மேல் தூக்கித் தரையில் அடிப்பது போன்ற அந்த வீடியோ பதிவைப் பார்த்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் தவித்துப் போனார்கள். அது விஜய் படமொன்றில் இடம் பெற்ற சண்டைக் காட்சியொன்றை நினைவூட்டுவதாகப் பேச்சு எழுந்தது. அடிபட்ட மாணவன் இறந்துவிட்டதாகக் கருதிய மாணவன் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வந்தன.

வருடத் தொடக்கத்தில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஐந்து பேர் கூட்டாகக் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு செய்தி வந்தது. அதே சமயத்தில் சேலத்தில் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் தனியார் தங்கும் விடுதியொன்றின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட செய்தியொன்றும் வந்தது. சில மாணவர்கள் தற்கொலையை சாகசச் செயலாகக் கற்பனை செய்துகொள்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

சாகசம் பதின் பருவத்தின் அடையாளமாக உருவெடுத்திருக்கிறது. செல்ஃபி மோகத்தால் ஏற்படும் மரணங்கள், ப்ளுவேல், கிகி சேலஞ்ச் மரணங்கள் பதின்பருவத்தினரையே அதிகமாகப் பலி வாங்குகின்றன. இவை தவிர வலைதளங்களில் கிடைக்கும் ஆபாச வீடியோக்கள், கதைகள். இவை பதின்பருவத்திலுள்ள மாணவர்களைக் குழப்புகின்றன, மனஅழுத்தத்தை உருவாக்குகின்றன. தேர்வில் தோற்றுப் போனதால் தற்கொலை செய்து கொண்டவர்களைவிட இத்தகைய மனஅழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போல் தோன்றுகிறது.

அடியோடு மாறிவிட்ட சூழல்

பதின்பருவத்தின் பெரும்பாலான வருடங்களைப் பள்ளியில் கழிக்கும் மாணவர்களைச் சமாளிப்பது முன்பு போல் இப்போது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்கிறார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர். முன்பு மாணவர்கள் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். வகுப்பறைகளின் அலமாரிகளில் பிரம்புகள் இருந்தன. மாணவர்கள் ஒழுங்காகப் படிக்காதபோது, கீழ்ப்படியாதபோது, அத்துமீறும்போது, ஒழுக்கக் கேடான நடத்தைகள் தென்படும்போது ஆசிரியர்கள் அவர்களைத் தண்டித்தார்கள். பிரம்புகளைக் கொண்டு விளாசினார்கள், காதைத் திருகினார்கள், வயிற்றைக் கிள்ளினார்கள், முட்டிபோட வைத்தார்கள், தோப்புக்கரணம் போடச் சொன்னார்கள், வெயிலில் நிற்க வைத்தார்கள், சில தருணங்களில் துப்புரவுப் பணிகளில் ஈடுபடச் செய்தார்கள்.

இப்போது அதெல்லாம் குற்றங்கள், சட்ட விரோதமான காரியங்கள் என்றாகிவிட்டன. இப்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குப் பல ஆசிரியர்கள் உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் தன்னை அடித்துவிட்டதாகவோ, வகுப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவோ புகார் அளித்தால் ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது, பணியிட மாறுதல், தற்காலிகப் பணி நீக்கம், ஊதிய உயர்வு நிறுத்தம், சில சமயங்களில் கைது வரைகூடப் போகிறது.

இது ஆசிரியர்களைத் தம் பொறுப்புக்களிலிருந்து பின்வாங்கச் செய்கிறது. எக்கேடும் கெட்டுப் போகட்டும் எனக் கருதிக்கொண்டு வெறுமனே பாடம் நடத்திவிட்டுப் போகிறார்கள். மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அவர்களைப் பொறுப்பற்றவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது எனக் குற்றம்சாட்டுகிறார்கள் ஆசிரியர்கள். பல சமயங்களில் ஆசிரியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூடச் சுமத்தப்படுகின்றன.

இப்போது மாணவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்கிறார்கள் என்பது ஓரளவுக்கு உண்மை என்றே வைத்துக்கொண்டால்கூட பொறுப்பானவர்களாக உருவாகிக்கொண்டிருக்கிறார்களா எனக் கேட்கிறார்கள் ஆசிரியர்கள். கல்வியின் முதன்மையான பணி பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுப்பதாகவே இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள் ஆசிரியர்கள்.

ஆசிரியர்களைத் தண்டிப்பதன் மூலம் மாணவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாத்துவிட முடியும் என அரசு நம்புகிறது. பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுப்பதைப் பற்றி அரசு சிந்திக்கவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு.

பொறுப்புணர்வை எப்படி வளர்ப்பது?

பொறுப்புணர்வை தண்டனைகளின் வழி கற்றுக்கொடுக்க முடியாது என்னும் உண்மையை அங்கீகரிப்பதற்கு யாருமே தயாராக இல்லை. தற்போதைய உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கலை, இலக்கியம் சார்ந்த பயிற்சிகளுக்கான இடமே இல்லை. முன்பு அநேகமாக அனைத்துப் பள்ளிகளிலும் இலக்கிய மன்றங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. வாரந்தவறாமல் இலக்கிய மன்றக் கூட்டங்கள் நடைபெற்ற காலங்கள் கூட உண்டு. பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், கவிதை, சிறுகதைப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், மாறுவேடப் போட்டிகள் எனக் கலை சார்ந்த செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களுக்கு வெளியே உள்ள உலகோடு தொடர்பு வைத்துக்கொள்ள அது உதவியது. இப்போது விளையாட்டுகளுக்கேகூட முக்கியத்துவம் அளிக்க முடியாத நிலை.

மாணவர்களின் பாடச்சுமை அதிகரித்துக்கொண்டே போகிறது. நீட் முதலான தகுதித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு மாணவர்களைத் தயார் செய்வதுதான் ஓர் ஆசிரியரின் வேலை என ஆகிக்கொண்டிருக்கும் சூழலில் ஆசிரியர்களும் மாணவர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள். அது அவர்களை மூர்க்கமானவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது, வன்முறைகளில் ஈடுபடச் செய்கிறது, பாலியல் சார்ந்த பிறழ்வுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

ஆசிரியர் - மாணவர் உறவு நெருக்கடியானதாக மாறிக்கொண்டிருக்கிறது. மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள், கொலை செய்கிறார்கள், கூட்டுப் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள், ஆசிரியர்கள் தங்கள் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகிறார்கள். யாருமே இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டது போல் தெரியவில்லை. அது ஏதோ கல்வியாளர்களும் கல்வித் துறை சார்ந்த அதிகாரிகளும் சிந்திக்க வேண்டிய விஷயம் என்பது போல் எல்லோருமே கடந்துபோக முயல்கிறார்கள்.

ஆனால், கல்வி பற்றி கல்வியாளர்கள் மட்டும் சிந்தித்தால் போதாது. அது ஒரு சமூகப் பண்பாட்டுப் பிரச்சினையாகப் பார்க்கப்பட வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிது காலம் செயல்பட்டவர். 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என். கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் Horper Perinial வெளியீடாக Farewell Mahatma என்னும் தலைப்பில் வெளிவந்தது. காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். மின்னஞ்சல் முகவரி: [email protected])

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon