மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

அண்ணா பிறந்த நாள்: கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்!

அண்ணா பிறந்த நாள்: கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்!வெற்றிநடை போடும் தமிழகம்

“அண்ணாவின் 110ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பத்தாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பத்தாண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 110ஆவது பிறந்த நாள், நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரும், திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “சிறைவாசிகள், அதிலும் ஆயுள் தண்டனை அடைந்தோர், பத்தாண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்ற காரணத்தால் விடுவிக்கப்படாமலேயே சிறையில் வாடுகின்றனர். பல சிறைவாசிகள் 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர். அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாகி, மரணத்தைவிடக் கொடுமையான மனத் துன்பங்களுக்கு சிறைவாசிகள் ஆளாகி உள்ளனர். ஏற்கெனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களை, மேலும் தண்டிப்பதைப் போல இந்த நடவடிக்கைகள் அமைகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

“குற்றப்பிரிவுகளைக் காட்டி விடுவிக்கப்படாத சிறைவாசிகளை, பொது மன்னிப்பில் விடுவிக்க அரசு முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள வைகோ, சிறைச்சாலையின் உள்ளே திருந்திய ஏராளமானோர் பொது மன்னிப்பு பெற முடியாமலும், பரோலில் செல்ல முடியாமலும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்தக் குறைபாடுகளைப் போக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“பேரறிஞர் அண்ணாவின் 110ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர் விடுவிக்கப்பட வேண்டும். பரோல் விடுப்பில் சென்று ஒருநாள் இரு நாள் தாமதமாகத் திரும்பியதைக் காரணம் காட்டி அவர்கள் விடுதலை பெற முடியாத இன்னலுக்கு ஆளாக்கும் நடைமுறையை மாற்றி, அவர்களையும் மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் வைகோ.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon