சமூக வலைதளங்களில் பரவும் ஆபாச மீம்ஸ்களை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான மீம்ஸ்கள் வலம்வருகின்றன. இவை சினிமா பட போஸ்டரில் தொடங்கி அரசியல் கட்சி தலைவர்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. சமகால நிகழ்வுகளைக் கொண்டு சிரிக்க மற்றும் சிந்திக்கத்தக்க வகையில் உருவாக்கப்படுவதால் இந்த மீம்ஸ்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் ஒரு சில மீம்ஸ்களில் உள்ள கருத்தை உணர்ந்துகொள்வது சற்று கடினமாக இருக்கும். சில சமயம் மற்றவர்களின் உதவியைக்கூட நாட வேண்டியது இருக்கும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ரோசேட்டா என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரோசேட்டா தொழில்நுட்பத்தின் மூலம் பதிவுகளில் உள்ள வார்த்தைகள் பிரித்தெடுக்கப்பட்டு, அதில் கூற வரும் கருத்துகளைப் பயனர்களுக்கு எடுத்துச் சொல்லும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பானது முதலில் புகைப்படத்தை ஸ்கேன் செய்து அதனை உரை வடிவில் அதாவது டெக்ஸ்ட் வடிவில் மாற்றிக்கொள்ளும். பின்னர் டெக்ஸ்ட் ரெகக்னிஷனின் உதவியுடன் அதில் என்ன கூற வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும். பின்னர் அதற்கான விளக்கத்தைப் பயனர்களுக்கு வழங்கும்.
மேஷபிள் இணையதளத்தில் வெளியான தகவலின்படி, இந்த ரோசேட்டா தொழில்நுட்பம் வெறும் மீம்ஸுக்காக மட்டும் வடிவமைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதனைக் கொண்டு மெனுவில் உள்ள வார்த்தைகள், சமிக்ஞைகள், ஆடைகளின் விவரத் துணுக்குகள் ஆகியவற்றை அடையாளம் காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது. பார்வையற்றோர் ஃபேஸ்புக் சேவையைப் பயன்படுத்துவதிலும் இதன் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரோசேட்டா தொழில்நுட்பத்தால் நாள் ஒன்றுக்குக் கோடிக்கணக்கான புகைப்படங்களைக் கண்காணிக்க முடியும். இதன் மூலம் ஆபாசமான வெறுக்கத்தக்கப் பதிவுகளை உடனடியாக நீக்கம் செய்துவிட முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.