மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: எழுவர் விடுதலை... இழுத்தடிக்கும் ஆளுனர், காத்திருக்கும் முதல்வர்!

டிஜிட்டல் திண்ணை: எழுவர் விடுதலை...  இழுத்தடிக்கும் ஆளுனர், காத்திருக்கும் முதல்வர்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் மெசேஜ்தான் முதலில் வந்தது.

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலையில் தமிழக அரசு, ஆளுனருடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அவசரமாக தமிழக அமைச்சரவை கூடி, 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரை செய்து ஆளுனருக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், ஆளுனரிடம் அதற்கான காலக்கெடு எதையும் தமிழக அரசு விதிக்கவில்லை. ஆளுனர் பதில் எதுவும் சொல்லமல் அமைதியாக இருந்தார். இன்றுதான் ஆளுனர் தமிழக அரசின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருக்கிறார்.

இதுதான் தமிழக அரசுக்கும், ஏழு பேரின் விடுதலையை எதிர்பார்த்தவர்களுக்கும் மீண்டும் ஒரு சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளுனர் அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டிய அவசியமே இல்லை. தானாகவே முடிவெடுத்திருக்கலாம். அதற்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கிறது. அப்படி அவரே இதை முடித்துவைக்காமல் மத்திய அரசுக்கு அதை அனுப்பியதே இழுத்தடிக்கும் வேலை என்றார்கள். ஆளுனரின் இழுத்தடிக்கும் வேலை பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அதிகாரிகள் சிலரே சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு எடப்பாடியோ, ' இந்த விவகாரத்தில் நாம் என்ன செய்யணுமோ அதை செஞ்சுட்டோம். ராஜீவ் காந்தி விவகாரத்தில் நாம இந்தத் தீர்மானம் போட்டதையே காங்கிரஸ் விரும்பலை. நாம இந்த அளவில் அழுத்தம் கொடுத்ததே போதும். பேரறிவாளன் அம்மா அற்புதம் அம்மாள் என்னை வந்து பார்த்து நன்றி சொல்லிட்டுப் போனாங்க. தமிழ் தேசியம் பேசும் ஆட்கள் மத்தியில் நமக்கு நல்ல பேரு வந்திருக்கு. இப்போ ஆளுனர் நடவடிக்கைகள் என்பது நமக்கு கெட்ட பெயரை உண்டாக்காது. ஆளுனர் செய்தால் அது மத்திய அரசு சொல்லி செய்வது என்பது என எல்லாருக்கும் தெரியும். அதனால் இனி விடுதலை செய்தாலும் செய்யாவிட்டாலும் அது பிஜேபி தலையில்தான் விடியும். நாம அமைதியாக மட்டும் இருப்போம்' என்று சொன்னாராம் எடப்பாடி. இப்படி ஒரு பதிலை எடப்பாடி சொல்வார் என்பதை அதிகாரிகள் எதிர்பார்க்கவே இல்லையாம்.

ஆளுனருக்கு மீண்டும் தமிழக அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கலாம். மீண்டும் ஒரு தீர்மானம்கூட நிறைவேற்றலாம்...' என அதிகாரிகள் சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. எடப்பாடியோ, 'இப்போ ஒரு தீர்மானம் போட்டோம். அத்துடன் இருக்கட்டும். இப்போதைக்கு வேறு தீர்மானம் எதுவும் வேண்டாம். மத்திய அரசு என்ன செய்யுதுன்னு பார்க்கலாம். அவங்க நடவடிக்கைக்கு பிறகு நாம் அடுத்த கட்டத்தைத் திட்டமிடலாம்...' என்று சொல்லிவிட்டாராம்" என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.

“இது முன்னாள் ஆளுனர் சம்பந்தப்பட்ட செய்தி. ஜெயலலிதா உடல் நிலை குறித்து மத்திய அரசுக்கு எதன் அடிப்படையில் அறிக்கை அனுப்பபட்டது என முன்னாள் ஆளுனர் வித்யாசாகர் ராவின் முதன்மைச் செயலாளர் ரமேஷ சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

அக்டோபர் 1ஆம் தேதியே அபாயகரமான நிலையில் இருந்த ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதற்கான முயற்சியை ஆளுனர் மேற்கொள்ளாதது ஏன் என முன்னாள் ஆளுனர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளரிடம் சரமாரியான கேள்வியை எழுப்பியுள்ளது ஆணையம்.

2011இல் சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு தனியாக ஜெயலலிதா இருந்தார். பின்பு சசிகலாவை ஜெயலலிதா தன்னுடன் இருக்க அழைத்துக்கொண்டார். இந்த சூழலில் 23 9.2016 மிகவும் அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் இருந்துள்ளார் ஜெயலலிதா. அக்டோபர் 1ஆம் தேதி லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மருத்துவ அறிக்கையில் 40 சதவீதமே உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அதை ஆளுனர் பார்த்த பின்பும், மேல் சிசிச்சைக்கு ஏன் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை. அவருடன் இருந்தவரும் எந்த முடிவும் எடுக்கவில்லையா என செயலாளர் ரமேஷ் சந்த மீனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதா உடல் நிலை குறித்து இரண்டு பொதுநல வழக்கு போடப்பட்டு இருந்த்து. அப்போது வெளியான மருத்துவ அறிக்கைகளுக்கும் உண்மையாக ஜெயலலிதாவிற்கு இருந்த உடல் நிலை குறித்த கேஸ் சம்மரிக்கும் வித்தியாசம் இருந்த்துள்ளது. மருத்துவ அறிக்கைகள் குறித்து ஆளுனர் ஏன் கேள்வி கேட்க முயற்சிகள் எடுக்கவில்லை என ஆணையம் கேட்டுள்ளது.

ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் போது நவம்பர் டிசம்பரில் நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற்ற இரண்டு அப்பல்லோ நிகழ்ச்சியில் ஆளுனர் பங்கேற்றிருக்கிறார். அப்போதும் அப்பல்லோ மருத்துவர்களிடம் ஜெயலலிதா உடல் நிலை குறித்து கேட்டாரா? சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எதுவும் கேட்காமல் மத்திய அரசுக்கு எவ்வாறான அறிக்கை அனுப்பப்பட்டது என ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று செல்கிறார்கள்.

அக்டோபர் 1ஆம் தேதியே ஜெயலலிதா அபாயகரமான நிலையில் இருந்துள்ளார் ஆனால் அவரிடம் இருந்த இலாக்காகள் 11.10.2016 அன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதுவும் எதிர்க்கட்சிகள் அரசு நிர்வாகம் நடைபெறாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டிய நிலையில்தான் இலாகா மாற்றம் நடைபெற்றதா என்று ஆளுனரின் நடவடிக்கைகள் குறித்து ஆணையம் முன்னாள் ஆளுனர் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சரமாரியாகக் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆளுனரை விசாரிக்க வேண்டிய நிலை ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆளுனரை விசாரிப்பதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதால் அது குறித்து ஆணையம் ஆலோசித்து வருகிறது" என்று முடிந்தது ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

வியாழன், 13 செப் 2018

அடுத்ததுchevronRight icon