மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

ஆரணி கோயிலில் நீதிபதி ஆய்வு!

ஆரணி கோயிலில் நீதிபதி ஆய்வு!

ஆரணியில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேற்று (செப்டம்பர் 12) திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களை, ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நீதிபதிகளும் நேரில் சென்று, அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. விருதுநகரைச் சேர்ந்த ஆர்.எஸ்.கல்யாணசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவின் அடிப்டையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புகழ்பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேற்று திடீரெனஆய்வு மேற்கொண்டார். அப்போது கோயிலில் தூசுகள் படிந்து தூய்மை இல்லாமல் இருந்ததைக் கண்ட நீதிபதி மகிழேந்தி, தன் கைகளால் தூசைத் துடைத்தார்.

கோயில்களில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். கோயிலில் இருந்த 8 சவரன் தங்க நகைகள் மற்றும் 60 கிலோ வெள்ளி பொருட்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கையாடல் செய்ததாக, பக்தர்கள் சங்கத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் நீதிபதி மகிழேந்தியிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து பலமுறை புகார் அளிக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் கூறினார். பக்தர்கள் தரப்பில் சொல்லப்பட்ட புகார்கள் உயர் நீதிமன்றத்தில் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon