மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 27 பிப் 2020

ஜெட்லி-மல்லையா: 15 நிமிடம் நீடித்த சந்திப்பு!

ஜெட்லி-மல்லையா: 15 நிமிடம் நீடித்த சந்திப்பு!

விஜய் மல்லையா லண்டன் செல்லும் முன் அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், அருண் ஜேட்லியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

9 ஆயிரம் கோடி ரூபாயைப் பொதுத் துறை வங்கிகளில் கடனாகப் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்து தப்பியோடிய விஜய் மல்லையா, லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியா கொண்டுவருவதாக அங்குள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 10ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில், “நான் இந்தியாவிலிருந்து லண்டன் புறப்படும் முன்பாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்தேன். நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன்’’ என்று விஜய் மல்லையா தெரிவித்திருந்தார். இந்த தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த அருண் ஜேட்லி, அது திட்டமிட்ட சந்திப்பு கிடையாது. நாடாளுமன்ற வளாகத்தில் எதேச்சையாக நடந்த விஷயம் என்று பதிலளித்தார்.

அருண் ஜேட்லி பொய் சொல்கிறார்

இந்த நிலையில் டெல்லியில் இன்று (செப்டம்பர் 13) செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அருண் ஜேட்லி பொய் சொல்கிறார். விஜய் மல்லையா அருண் ஜேட்லியைச் சந்தித்ததற்கு ஆதாரமாக எம்.பி புனியா இருக்கிறார். இருவரும் 15-20 நிமிடங்கள் வரை அமர்ந்து பேசியுள்ளனர். குற்றவாளியான விஜய் மல்லையாவுடன் செய்துகொண்ட ரகசிய உடன்பாடு குறித்து, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். அருண் ஜேட்லி எதற்காகக் குற்றவாளியைச் சந்தித்தார்? அவருடன் என்ன கலந்துரையாடினார்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி., பி.எல். புனியா கூறுகையில், “நான் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அமர்ந்திருந்தேன். அங்கு ஒரு ஓரத்தில் அருண் ஜேட்லியும் விஜய் மல்லையாவும் நின்று உரையாடிக்கொண்டிருந்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு அங்குள்ள பெஞ்ச்சில் அமர்ந்து உரையாடலைத் தொடர்ந்தனர். ஜேட்லியை சந்திக்க விஜய் மல்லையா முதல் முறையாக அங்கு வந்திருந்தார். நான் சவால் விடுக்கிறேன், நீங்கள் அன்றைய தினத்தின் சிசிடிவி காட்சிகளைப் பாருங்கள். நான் சொல்வது தவறாக இருந்ததென்றால் நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

ஜேட்லியைக் குறிவைக்கும் சுப்ரமணியன் சாமி

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தோ, “அரைகுறையாகப் பேசப்பட்ட இந்த விஷயத்தை காங்கிரஸ் அரசியலாக்குகிறது. ராகுல் காந்தி லண்டன் சென்று வந்த பிறகே இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது. எனவே ராகுலும் மல்லையாவும் இணைந்து செயல்படுகின்றனரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரவிசங்கர் பிரசாத் இவ்வாறு கூறியிருக்க புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் பாஜக எம்.பி. சுப்ரமணியன் சாமி.

“மல்லையா தப்பிய விவகாரத்தில் இரு மறுக்க முடியாத உண்மைகள் உள்ளன. லுக் அவுட் நோட்டிஸ் தளர்த்தப்பட்டு, 2015ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச் சென்றார். லண்டன் செல்வதற்கு முன்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து அதுகுறித்து கூறியிருக்கிறார்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆளுங்கட்சியில் இருந்துகொண்டே அக்கட்சியின் அமைச்சருக்கு எதிராக சுப்ரமணியன் சாமி வெளியிட்டுள்ள இந்த கருத்து கட்சிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதவி நீக்கம் செய்ய வேண்டும்

இந்த நிலையில் அருண் ஜேட்லியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறியிருப்பதன் மூலம், பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது. பிரதமர், அந்த ரகசியப் பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்திட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon