மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

எழுவர் விடுதலை: பாஜகவிடம் ஆளுநர் ஆலோசனை கேட்க மாட்டார்!

எழுவர் விடுதலை: பாஜகவிடம்  ஆளுநர்  ஆலோசனை கேட்க மாட்டார்!

எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் பாஜகவிடம் ஆலோசனை கேட்க மாட்டார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே தீர்மானிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. விடுதலை குறித்த பரிந்துரைக் கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், இது குறித்து ஆளுநர் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. மாறாக கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “எழுவர் விடுதலை குறித்த பரிந்துரை கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். ஆளுநர் என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பார்ப்போம். ஆளுநர்கள் தங்களுக்கென்று தனி ஆலோசனைக் குழுக்களை வைத்துக்கொள்ளவில்லை. ஆளுநர்கள் ஆளுநர்களாகவே செயல்படுகின்றனர். விடுதலை குறித்து பாஜகவிடம் அவர் ஆலோசனை கேட்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். எந்தக் கட்சியின் ஆளுநராக இருந்தாலும் அப்படிச் செய்ய மாட்டார்கள். ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அப்படிச் செய்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டுவருகிறதே என்ற கேள்விக்கு, அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று பதிலளித்தார். “கோடிக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர். பல தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் உருவாகியுள்ளன. ஒவ்வொருவரும் ஒரு கருத்தைக் கூறுவார்கள். நக்சலைட்டுகளும், பயங்கரவாதிகளும்கூடச் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்” என்றும் தெரிவித்தார்.

திராவிடக் கட்சிகள் கைகாட்டுபவர்கள்தான் அடுத்த பிரதமர் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, “திமுக, அமமுக மற்றும் எந்தக் கட்சிக்கும் அந்த அருகதை இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இப்போது இருப்பதை விட அதிக இடங்களைக் கைப்பற்றி, பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மீண்டும் உருவாகும். செப்டம்பர் மாதம் தமிழகம் வருவேன் என்றுதான் அமித் ஷா கூறியிருக்கிறார். கூட்டணி குறித்து இதுவரை எதுவும் முடிவெடுக்கவில்லை” என்று பதிலளித்தார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon