மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

குட்கா: தொழிலதிபரின் வங்கிக் கணக்கு முடக்கம்!

குட்கா: தொழிலதிபரின் வங்கிக் கணக்கு முடக்கம்!

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவ ராவை, குட்கா குடோனுக்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவரது இரண்டு வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

குட்கா ஊழல் தொடர்பாக கடந்த 5ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவுத் துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை கைதும் செய்தனர்.

இவர்களை வரும் 14ஆம் தேதிவரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், நுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் ஐந்து பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

மூன்றாவது நாளாக இன்று (செப்டம்பர் 12) விசாரணை தொடரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக குட்கா ஊழலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதவராவை, செங்குன்றத்திலுள்ள அவரது ஆலைக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். குடோனுக்கு வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றிய அதிகாரிகள், மாதவ ராவை உள்ளே அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாதவ ராவின் உறவினர்கள் இருவரும், குடோன் மேலாளர்களும் விசாரணைக்காக அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து மாதவ ராவிடம் அங்கு விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் இந்த குடோனுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், செங்குன்றம் எஸ்பிஐ, கரூர் வைசியா ஆகிய வங்கிகளில் உள்ள மாதவ ராவின் 2 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon