மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

புதிய கொள்முதல் திட்டத்துக்கு ஒப்புதல்!

புதிய கொள்முதல் திட்டத்துக்கு ஒப்புதல்!

புதிய கொள்முதல் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை இன்று (செப்டம்பர் 12) ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, விவசாயிகளைக் கவரும் விதமாக காரிஃப் பருவ விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் மாதத்தில் ஒன்றிய அரசு உயர்த்தி அறிவித்திருந்தது. இதன்படி நெல், பருப்பு, பருத்தி உள்ளிட்ட 22 பயிர்களுக்கான ஆதரவு விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கொள்முதல் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் எல்லா பகுதிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கே கொள்முதல் செய்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்பத்தி மிகுந்து பல பகுதிகளில், விளைபொருட்கள் கடும் விலை வீழ்ச்சியைக் கண்டுள்ளன. இதையடுத்து விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும், தங்குதடையில்லாமல் கொள்முதல் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

இதற்கான புதியக் கொள்முதல் திட்டத்தை வகுக்குமாறு அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக்கிடம் ஒன்றிய அரசு கேட்டிருந்தது. வேளாண் அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து இந்தப் புதியக் கொள்கையை வகுக்குமாறும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து நிதி ஆயோக் தயாரித்து அளித்த புதிய கொள்முதல் திட்ட வரைவறிக்கை இன்று அமைச்சரவையின் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “புதிய கொள்முதல் திட்டமான அன்னதத்தா மயுல்யா சம்ரக்‌ஷனா யோஜனா இன்று அமைச்சரவையில் விவாதத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதன்படி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் கீழாக விளைபொருட்களின் விலை சரிந்தால் விவசாயிகளைப் பாதுகாக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளை விலை வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்க அம்மாநில அரசு பவந்தர் புக்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை தழுவி நிதி ஆயோக் புதிய கொள்முதல் திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon