மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 9 டிச 2019

ஜெ.நினைவிட வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

ஜெ.நினைவிட வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்க அனுமதி வழங்கிய தீர்ப்பை ஒப்பிட்டு அவரது நினைவிட வழக்கில் முடிவெடுக்க கூடாது என்ற மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜெயலலிதா நினைவிடத்தை அரசின் செலவில் அமைக்கக் கூடாது எனக் கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவின் நினைவிடம் கட்ட அரசு 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. அவர் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்பதால் பொது இடத்தில் நினைவிடம் அமைக்க கூடாது” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் முன் நடைபெற்று வருகிறது. இன்று (செப்டம்பர் 12) வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனு தாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவையில் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்போடு இந்த வழக்கை சம்பந்தப்படுத்த கூடாது என கோரியிருந்தார்.

“ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவை வளாகத்தில் வைப்பது சபாநாயகரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆனால், நினைவிடம் என்பது பொது இடத்தில் அமைக்கப்படுவதால் ஜெயலலிதா படத்தை சட்டப் பேரவையில் வைப்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை நினைவிட வழக்கோடு ஒப்பிட்டுப் பார்க்க கூடாது” என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது

மனுதாரரின் இந்த கூடுதல் மனுவுக்கு பதிலளிக்க அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கால அவகாசம் கேட்டார்.

இதையடுத்து மனுவுக்கு பதில் தர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 5ஆம் தேதி தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon