மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

மருத்துவமனை ஊழியர் மரணம்: காவல் துறைக்கு உத்தரவு!

மருத்துவமனை ஊழியர் மரணம்: காவல் துறைக்கு உத்தரவு!

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் ஒருவரின் மர்ம மரணம் தொடர்பாக, காவல் துறை விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் பணியாற்றிய ஊழியர் வினோத்குமார் என்பவர், கடந்த ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்ததாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக அந்த வாலிபரின் தாய் பழனியம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். தன்னுடைய மகன் வினோத் குமார், பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துவிட்டு பெருங்குடியில் உள்ள என்பிஎஸ்பி அந்தஸ்துடைய ஒரு தனியார் பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனையில் பணியாற்றி வந்ததாகத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். “கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியது அந்த மருத்துவமனை. அதில், என் மகன் மிகவும் கவலைகிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவசரமாக சென்னை வந்தேன். அந்த மருத்துவமனையில் இருந்தவர்கள், என்னுடைய மகன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மகனது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, ராயப்பேட்டை மருத்துவமனையில் வினோத்குமார் மரணம் தொடர்பான உடற்கூறு ஆய்வுகள் செய்யப்பட்டன. அப்போதே, தனது மகன் பணியாற்றிய தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது எனவும், காவல் துறையில் புகார் அளித்ததால் தனக்கும் மிரட்டல் விடுத்தனர் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

“இது தொடர்பாக காவல் துறை இயக்குனரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை, வினோத்குமாரின் உடற்கூறு அறிக்கையும் வழங்கப்படவில்லை. ஆர்டிஐயில் தகவல் கேட்டும், உடல் கூறு அறிக்கை கிடைக்கவில்லை.

எனவே இந்த மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று பழனியம்மாள் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், இந்த வழக்கு தொடர்பாக துரைப்பாக்கம் காவல் துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon