மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட ஹர்திக் படேல்

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட ஹர்திக் படேல்

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திக் கடந்த 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஹர்திக் படேல் தனது உண்ணாவிரதத்தை இன்று (செப்டம்பர் 12) முடித்துக்கொண்டார்.

படிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி என்ற அமைப்பின் தலைவரான ஹர்திக் படேல், குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் அகமதாபாத்தின் காந்தி நகரில் உள்ள தனது இல்லத்தில் ஹர்திக் படேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையே அவர், கடந்த 7ஆம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் 9ஆம் தேதி வீடு திரும்பினார். எனினும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடவில்லை. உண்ணாவிரதம் இருந்த காலத்தில் அவர் சுமார் 20கிலோ எடை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் இன்று இளநீர் அருந்தி அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். ‘இட ஒதுக்கீடு போராட்டத்தை வென்றெடுக்க நீங்கள் உயிருடன் வாழ வேண்டும்’ என்று அவரது நண்பர்கள், படிதார் அமைப்புகளின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதின் பெயரில் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முடிவை ஹர்திக் மாற்றிக்கொண்டுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த ஹா்திக் படேலை குறிப்பிடத்தக்க நபர்களான பிரகாஷ் அம்பேத்கா், யஷ்வந்த் சின்கா, ஹரிஷ் ராவத், ஜிக்னேஷ் மேவானி, திமுக. செய்தி தொடா்பாளா் ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இந்த போராட்டத்தை மாநில அரசு பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon