மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவு!

அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாகத் தெரிவித்துள்ளது தமிழகக் கல்வித் துறை.

தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 529 அரசுப் பள்ளிகளும், 436 மாநகராட்சிப் பள்ளிகளும், 839 நகராட்சிப் பள்ளிகளும், 6,589 நிதியுதவி பெறும் பள்ளிகளும், 28,042 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளும், 1,471 நலத்துறைப் பள்ளிகளும், 6,308 நர்சரி பிரைமரி பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 37 லட்சத்து 24 ஆயிரத்து 788 மாணவர்கள் படிக்கின்றனர். ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக இருந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு 56 லட்சமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர் எண்ணிக்கை, தற்போது 46 லட்சமாகக் குறைந்துள்ளது என்று தமிழகக் கல்வித் துறை தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் எண்ணிக்கை 75 சதவிகிதம். நான்கு அரசுப் பள்ளிகளில் மட்டுமே 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மேலும் 900 அரசுப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு, மெட்ரிக் பள்ளிகள் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையானது 15,000 ஆக அதிகரித்துள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon