மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

எழுவர் விடுதலை: அதிமுக நன்றியை மறந்துவிட்டது!

எழுவர் விடுதலை: அதிமுக நன்றியை மறந்துவிட்டது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக, அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியதால் நன்றியை மறந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக கடந்த 9ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து அமைச்சரவை தீர்மானத்தை நேற்று ஆளுநருக்கு அனுப்பியுள்ளது தமிழக அரசு. ஒவ்வொருவருக்கும் நான்கு தனித்தனி கோப்புகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தியின் மகனும் காங்கிரஸின் தலைவருமான ராகுல் காந்தி, “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டவர்களை எங்கள் குடும்பம் மன்னித்துவிட்டது. அவர்களை விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்திருந்தார். ஆனால் ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ள நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா, ராகுலின் கருத்துக்கு முரண்பட்ட வகையில், “தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களை தற்போது நாம் விடுதலை செய்யப் போகிறோமா?” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

எழுவர் விடுதலைக் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே முரண்பட்ட கருத்துகள் நீடித்துவரும் இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 11) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், “ஜெயலலிதா முதலமைச்சராக வருவதற்கு ராஜீவ் காந்திதான் காரணம். எம்ஜிஆர் இறந்த பிறகு, ஜெயலலிதா 1989ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது தோல்வியடைந்தார். 1991ஆம் ஆண்டு எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார் ராஜீவ் காந்தி. அப்போது காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்தது. அந்தத் தேர்தலின்போதுதான் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்கப்பட்டு மரணமடைந்தார். அந்தச் சமயத்தில் ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வரானார். இதையெல்லாம் மறந்துவிடக் கூடாது.

ஜெயலலிதாவின் பெயரை சொல்லிக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கும் எடப்பாடி அரசு, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய அனுமதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது சரியல்ல. இது தவறான முன்னுதாரணமாகிவிடும்” என்று தெரிவித்தார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon