மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

தன்பாலின உறவு காட்டுமிராண்டித்தனம்: துரைமுருகன்

தன்பாலின உறவு காட்டுமிராண்டித்தனம்: துரைமுருகன்

ஆணுடன் ஆணும், பெண்ணுடன் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் தன்பாலின உறவு காட்டுமிராண்டித்தனமானது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377இன் படி, தன்பாலின உறவானது சட்டவிரோதம் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவந்தது. இவ்வழக்கில் கடந்த 6ஆம் தேதி, ‘தன்பாலின உறவு குற்றமாகாது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பல்வேறு தரப்பினரும் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

திமுகவின் மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது வாழ்க்கையின் தனிப்பட்ட தேர்வுகளையும் முடிவுகளையும் சட்ட தீர்மானிக்கக் கூடாது. - உச்ச நீதிமன்றத்திற்கு வாழ்த்துகள். இந்தியா உலக அளவில் மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்கான முக்கியமான ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறது. இதன் பிறகாவது நாம் எல்லோரையும் அரவணைக்கக்கூடிய, சகிப்புத்தன்மை உடைய, சுய சிந்தனை உடைய ஒரு சமூகத்தை நோக்கி பயணிப்போமாக” என்று தெரிவித்திருந்தார்.

கனிமொழி இவ்வாறு ஆதரவு தெரிவித்திருக்க, திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் தன்பாலின உறவு காட்டுமிராண்டித்தனமானது என்று விமர்சித்திருக்கிறார்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று (செப்டம்பர் 12) நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய துரைமுருகன், “ஆணுடன் ஆணுக்கும் திருமணம் செய்வது அல்லது பெண்ணுடன் பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. ஆணுக்கு ஆணுக்கும் இடையே திருமணம் செய்துகொள்வது காட்டுமிராண்டித்தனமானது. நமது கலாச்சாரத்திற்கும் விரோதமானது. இதற்கு சட்டமும் மேலும் சிலரும் துணை போயுள்ளனர். மதத்துக்கு மதம் திருமண முறை மாறுபட்டாலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் திருமணம் நடைபெறும்” என்று பேசினார்.

கனிமொழியும், துரைமுருகனும் தன்பாலின உறவு குறித்து வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பம் எழுந்துள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon