மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 28 மா 2020

கப்பல்கள் உடைப்பு: உயர் நீதிமன்றம் கேள்வி!

கப்பல்கள் உடைப்பு: உயர் நீதிமன்றம் கேள்வி!

சென்னை துறைமுகத்தில் எட்டு ஆண்டுகளாக நிற்கும் இரண்டு கப்பல்களை உடைக்க அனுமதிக்கலாமா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளாக, சென்னை துறைமுகத்தில் ‘ரைசிங் ஸ்டார்’, ‘ரைசிங் சன்’ என்ற 2 கப்பல்கள் பழுதடைந்து நின்று கொண்டிருக்கின்றன. இந்த கப்பல்களை உடைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான அனுமதியைப் பெற சென்னை துறைமுக நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் முறையிட்டது. ஆனால், கப்பலை பழுது பார்க்க மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும், கப்பலை உடைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவித்தது துறைமுக நிர்வாகம். கப்பலை உடைக்க அனுமதி வழங்கினால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கூறியது.

இந்த உத்தரவை எதிர்த்து, அந்த கப்பல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 12) நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “8 ஆண்டுகளாக கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. அந்த கப்பல்கள் கடலில் மூழ்கும் முன்பு, அதை உடைக்க அனுமதி வழங்கினால் என்ன?” என்று கேட்டார் நீதிபதி.

சென்னை துறைமுகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜா மொய்தீன் ஹிஸ்தி, துறைமுகத்தில் கப்பல்களை உடைக்க அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்தார். “கப்பல் மூழ்கிவிடும் நிலையில் உடைக்க அனுமதி கொடுத்தால், அதனை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மேலும் பல நிறுவனங்கள் வழக்கு தொடரும். அவ்வாறு கப்பல்களை உடைக்க அனுமதித்தால், கடலில் மிகப்பெரிய மாசு ஏற்படும்” என்று வாதிட்டார்.

இந்த இரு கப்பல்களின் நிலை மற்றும் அவற்றை உடைக்க அனுமதி தருவது குறித்து, ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிடலாமா? என்று நீதிபதி ஆர்.மகாதேவன் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணையை நாளை மறுநாள் (செப்டம்பர் 14) தள்ளிவைப்பதாக உத்தரவிட்டார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon