மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 4 ஏப் 2020

தமிழில் தேர்வு: பல்கலை. மாணவர்கள் போராட்டம்!

தமிழில் தேர்வு: பல்கலை. மாணவர்கள் போராட்டம்!

ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென்று கோரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று இந்திய மாணவர் சங்கம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது.

யுசிஜியைக் கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், ஆங்கில வழியில் படிப்பவர்களுக்குத் தமிழில் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும் என்பது உட்படப் பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (செப்டம்பர் 12) திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் மாணவர்கள்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார், அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாணவர்கள் தென்காசி – திருநெல்வேலி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள், போலீசார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அப்பல்கலைக்கழக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon