மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

வங்கி மோசடியாளர்கள்: காப்பாற்றியதா பிரதமர் அலுவலகம்?

வங்கி மோசடியாளர்கள்: காப்பாற்றியதா  பிரதமர் அலுவலகம்?

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாகப் பெற்று மோசடி செய்தவர்களின் பட்டியலை தான் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும், ஆனால் அதுபற்றி பிரதமர் அலுவலகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பிரதமர் மோடிக்கு அடுத்த கட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகளின் வசூலிக்கப்படாத வாராக்கடனால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக நலிவடைந்துள்ளது. ரூ.4 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன் தொகையானது ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் கருத்தைக் கேட்டிருந்தது முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டுக்குழு.

அதற்கு பதிலளித்திருந்த ரகுராம் ராஜன் பல்வேறு நிதி மோசடியில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகளின் பட்டியலை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த பட்டியல் பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதுவரை அந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா இன்று தனது ட்விட்டரில், “ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் 2016 ஆம் ஆண்டு வங்கி மோசடியாளர்களின் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார். அதன் மீது இப்போது வரை மோடி நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரகுராம் ராஜன் அனுப்பிய பட்டியலில் இப்போது வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்ட நீரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோர் பெயரும் உள்ளது. இதன் மூலம் இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட காரணமாக இருந்தவர் பிரதமர் மோடிதான் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தவர் ரகுராம் ராஜன்.

“நெருக்கடியான காலத்தில், வங்கிகள் நடவடிக்கை எடுப்பதில் மந்த போக்கில் செயல்பட்டுள்ளன. அப்போதுகூட கடன்களை வாராக்கடன்களாக அறிவிப்பதைவிட அவற்றை மாற்றியமைப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்டின. இருந்தும் கடனாளர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் போனதன் விளைவாக, வாராக்கடன் இந்த அளவிற்கு உயர்ந்துவிட்டது. பொதுத் துறை வங்கிகளில் கடனை பெற்றுக் கொண்டு மோசடி செய்யப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் நிர்வாக திறனை மேம்படுத்துதல் மற்றும் மத்திய அரசின் தலையீடுகளை பொதுத்துறை வங்கிகளில் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் பண மோசடியை குறைப்பதே ஒரே தீர்வாக இருக்கும்” என்றும் தான் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ரகுராம் ராஜன்.

இதற்கிடையில் வங்கி மோசடியாளர்களைக் காப்பாற்றிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று (செப்டம்பர் 12) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீடுக் குழு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வாராக் கடன்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சமர்ப்பித்துள்ளார். அதில் வாராகடன்கள் உருவாவதற்கான காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். மோசடியாக உள்நோக்கத்துடன் கடன் பெறுவது முக்கியமான காரணமாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘மோசடி கடனாளிகளின் பட்டியலைப் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி ஒன்றிரண்டு பேர் மீதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் போது வலியுறுத்தினேன். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இது அவசரமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாகும்’ என்று அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளும், மாணவர்களும் வாங்குகிற சில ஆயிரம் ரூபாய் கடன்களுக்காக அவர்களை அவமானப்படுத்தி அடியாட்களை வைத்து மிரட்டி வங்கிகள் தரும் நெருக்கடியால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மோசடி செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கு பாதுகாப்பளித்து அவர்களை வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மோடி அரசு உதவுகிறது.

ரகுராம்ராஜன் பிரதமர் அலுவலகத்துக்கு அளித்த மோசடி கடனாளிகளின் பட்டியலை உடனே பகிரங்கமாக வெளியிட வேண்டும். இத்தனை காலமாக அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் மோசடி பேர்வழிகள் தப்பிச் செல்ல உதவியாக இருந்ததற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon