மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

பெண்களுக்குத் திறந்த வெளிச் சிறை: அரசுக்கு உத்தரவு!

பெண்களுக்குத் திறந்த வெளிச் சிறை: அரசுக்கு உத்தரவு!

தமிழ்நாட்டில் திறந்த வெளிச் சிறையில் தங்குவதற்குப் பெண்களும் தகுதியானவர்கள் என்று சிறை விதிகளில் மாற்றம் செய்யுமாறு, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘‘சென்னை புழல், திருச்சி, வேலூர் மற்றும் மதுரையில் பெண்களுக்கான தனியாகச் சிறைச்சாலைகள் உள்ளன. ஆண் கைதிகளுக்கு சிவகங்கை, சிங்காநல்லூர் மற்றும் சேலத்தில் திறந்தவெளிச் சிறைகள் உள்ளன. இங்கு விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன்மூலம், அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைக்கிறது. அதனால், பெண்களுக்கும் திறந்தவெளிச் சிறைகளை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று (செப்டம்பர் 11) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறைத்துறை கூடுதல் ஏடிஜிபி ஆசுதோஷ் சுக்லா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

“தமிழகத்தில் பெண்களுக்கு என தனியாக 5 மத்தியச் சிறைகள், 10 சிறப்பு மற்றும் துணைச் சிறைகள் உள்ளன. சிறைத்துறை விதிகளின்படி பெண்கள், மூன்றாம் பாலினத்தனவர், அரசியல் கைதிகள் உள்ளிட்டோரை திறந்தவெளிச் சிறையில் அனுமதிக்க முடியாது. அதில், பாதுகாப்பு பிரச்சனை உள்ளன” என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறைவிதிகள் 1983ன் படி கைதி என்ற வார்த்தை ஆண், பெண் பாகுபாடு பார்க்கவில்லை என்று கூறினர் நீதிபதிகள். அதனால், தமிழகத்தில் திறந்தவெளிச் சிறையில் தங்குவதற்குப் பெண்களும் தகுதியானவர்கள் என சிறைவிதிகள் 1983ல் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 12 வாரங்களுக்குள் திறந்தவெளிச் சிறை தொடர்பாக சிறை விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலர் மற்றும் சிறைத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon