மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

முட்டை டெண்டர் தடையை நீக்கக் கோரும் தமிழக அரசு!

முட்டை டெண்டர் தடையை நீக்கக் கோரும் தமிழக அரசு!

முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

2017-18 ஆண்டுக்குப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் புள்ளிகளை கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதில் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வெளி மாநில கோழி பண்ணைகள் பங்குபெறுவதை தடை செய்தும், தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி டெண்டருக்கு தடை விதித்து வெளி மாநில கோழி பண்ணைகளையும் அனுமதிக்கக் கோரி கரூரைச் சேர்ந்த வாசுகி கோழி பண்ணை உள்ளிட்ட 4 பண்ணைகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு வரும் 20ஆம் தேதி வரை தடை விதித்தும், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டும், விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இவ்வழக்கில் டெண்டருக்கு தடை விதிக்கப்பட்டதை நீக்கக் கோரி சமூக நலத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், மாநில அளவிலான டெண்டர் முறை என்பது அரசின் கொள்கை முடிவு என விளக்கமளித்துள்ளது.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் தொற்றுநோய் பரவாத முட்டைகளாக இருக்கவேண்டும் என்றும் இதனால் கண்காணிப்பில் உள்ள கோழிபண்ணைகளில் மட்டும் முட்டைகளை வாங்கத் தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாக மனுவில் கூறியுள்ளது.

அடையாளம் தெரியாத கோழிப்பண்ணைகளிலிருந்து பதப்படுத்தப்படாத முட்டைகளை அனுமதித்தால் அது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலே, தமிழக அரசு முட்டை வினியோகம் செய்வதில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணை நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon