மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

எம்எல்ஏக்கள், எம்பிகளின் வழக்குகள்: சிறப்பு நீதிமன்றங்கள்!

எம்எல்ஏக்கள், எம்பிகளின் வழக்குகள்: சிறப்பு நீதிமன்றங்கள்!

எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் மீதான வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு நேற்று (செப்-11) தெரிவித்துள்ளது.

2017 டிசம்பர் 14இல், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகளின் மீதான வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு வக்காலத்து மனு ஒன்றை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் கூறியுள்ளதாவது:

நாட்டிலுள்ள 11 மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்கள் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகளின் மீதான வழக்குகளை மட்டும் விசாரிக்கும். இதில் டெல்லியில் இரண்டு நீதிமன்றங்களும்,ஆந்திரா, தெலங்கானா, கா்நாடகா, கேரளா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 நீதிமன்றங்கள் குற்ற அமர்வு நீதிமன்றங்கள் ஆகும். மற்ற நீதிமன்றங்கள் 5 மாஜிஸ்டிரேட் நீதிமன்றங்களும் ஆகும்.

இதுவரை எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகளின் மீதான 1,233 வழக்குகள் இந்நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. 136 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன,1,097 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பிகாரில்தான் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் மீது அதிகமான வழக்குகள் உள்ளன. அந்த மாநிலத்தில் 260 வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.இவற்றில் 11 வழக்குகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 249 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேற்கு வங்கத்தில் 215 வழக்குகள் உள்ளன. இவற்றில் ஒரு வழக்கு கூட விசாரிக்கப்படவில்லை. டெல்லியிலும், கேரளத்திலும் 157 வழக்குகள் உள்ளன இதில் 44 வழக்குகள்தான் கடந்த 6 மாத காலத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன. கா்நாடகாவில் 142 வழக்குகள் உள்ளன. இதில் 19 வழக்குகள்தான் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவிலும் 64 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மகாராஷ்டிராவிலும் மத்தியப் பிரதேசத்திலும் முறையே 50 மற்றும் 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் நிலை குறித்தும் அங்குள்ள வழக்குகள் குறித்தும் தகவல் அளிக்கப்படவில்லை. மீதியுள்ள மாநிலங்களில் சிறப்பு

நீதிமன்றங்கள் விரைவில் அமைக்கப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon