மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

சீனா செல்லும் ‘மெர்சல்’!

சீனா செல்லும் ‘மெர்சல்’!

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

சீனாவில் இந்தியப் படங்களுக்கான சந்தை சமீபகாலமாக நம்பமுடியாத அளவுக்கு விரிவடைந்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரியளவில் கலாச்சார பேதங்கள் இல்லாதது சீன ரசிகர்களுக்கு இந்திய படங்கள் பிடித்துப்போவதற்கான காரணமாக உள்ளது. பெரிய நிலப்பரப்பில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால் திரையரங்குகளின் எண்ணிக்கை இந்தியாவை விட மிக அதிகம். ஆமீர் கானின் தங்கல், சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான், சுல்தான் ஆகிய படங்கள் உலகளவில் பெற்ற வசூலுக்கு நிகராக சீனாவிலும் வசூல் சாதனை படைத்தன. இந்தி, தெலுங்கு படங்கள் சீனாவில் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. முதன்முறையாகச் சீனாவில் வெளியாகும் தமிழ் படம் என்ற பெருமையைப் பெறப் போகிறது விஜய் நடித்த மெர்சல் திரைப்படம்.

ஜூலை மாதம் 12ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதிவரை சீனாவில் நடைபெற்ற பச்யான் சர்வதேச ஃபென்டாஸ்டிக் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சீனாவின் பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஹெச்.ஜி.சி எண்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தை சீன மொழிக்கு மாற்றி வெளியிடுவதாக அறிவித்தது. அந்த நிறுவனத்தின் தலைவர் லி யிங், “மெர்சல் படத்தின் கதை மனதைத் தொடும் வகையில் அமைந்துள்ளது” என ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு இறுதியிலோ அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சீனா முழுவதும் 10,000 திரையரங்குகளில் டிசம்பர் 6ஆம் தேதி மெர்சல் படம் வெளியாக உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon