மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: இலங்கை செல்லும் பன்னீர்செல்வம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: இலங்கை செல்லும் பன்னீர்செல்வம்

வரும் 16ஆம் தேதி இலங்கையின் கண்டியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக இலங்கை அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஒரு வருடமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நடந்தது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். இறுதியாக வரும் 30ஆம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையில் எம்ஜிஆர் பிறந்த இடமான இலங்கையிலுள்ள கண்டியில் கூட்டுறவு சங்க அரங்கத்தில் வரும் 16ஆம் தேதி எம்ஜிஆர் இரண்டாம் நூற்றாண்டு ஆரம்ப விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இலங்கை கல்வித் துறை அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் கடந்த 5ஆம் தேதி நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (செப்டம்பர் 11) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் 16ஆம் தேதி இலங்கையின் கண்டியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. எம்ஜிஆர் கண்டியைப் பிறப்பிடமாக கொண்டவர். அவர் பிறந்த ஊரில் விழா எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக துணைமுதல்வர் பன்னீர்செல்வமும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 90 சதவிகிதம் அவர்கள் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் நூலகத்துக்கு, அமைச்சர் செங்கோட்டையன் சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் 18ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon