மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுகதான் வெற்றிபெறும் : ஜெயக்குமார்

அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுகதான் வெற்றிபெறும் : ஜெயக்குமார்

அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதையடுத்து ஒய்எம்சிஏ மைதானத்தில் பந்தற்கால் நடும் நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 12) நடைபெற்றது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மிகப்பெரிய எழுச்சிமிக்க விழாவாக இருக்கும். தமிழக முழுவதிலுமிருந்து அதிமுக தொண்டர்கள் உட்பட 5 லட்சம் பேர் பங்குபெறுவார்கள். “எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கிச் சென்றது என்ற பழமொழி போல 30ஆம் தேதி எல்லா சாலைகளும் சென்னையை நோக்கி வரும்" என்று குறிப்பிட்டார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உட்படத் தேசிய தலைவர்கள் நிறைவு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, நிகழ்ச்சிக்கு இன்னும் காலம் இருப்பதால் அதுகுறித்து கட்சி ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார்.

தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அந்தச் சமயத்தில் அரசியலில் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் என்பதெல்லாம் சாதாரணமாக நடக்கும் என்று குறிப்பிட்டார்.

வேலுமணி உட்பட அமைச்சர்கள் மீதான ஊழல்கள் குறித்த கேள்விக்கு, தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் என்று வேலுமணி சவால் விடுத்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜெயக்குமார் திமுக சவாலுக்குத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது அனைத்து மாவட்டங்களிலும் 50000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இடைத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெறும். தேர்தல் நேரத்தில் எங்களுடைய திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வோம். அதற்கான பரிசினை மக்கள் எங்களுக்குத் தருவார்கள் என்று தெரிவித்தார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon