மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 25 பிப் 2020

காலநிலை மாற்றத்தினால் உணவுப் பற்றாக்குறை!

காலநிலை மாற்றத்தினால் உணவுப் பற்றாக்குறை!

காலநிலை மாற்றத்தினால் உலக நாடுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு பசியால் வாடுபவர்களின் எண்ணி்க்கை அதிகரித்து வருவதாக ஐநாவின் அமைப்பான உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐநாவின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பும் உலக உணவுத்திட்டமும் விடுத்துள்ள ஆண்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

காலநிலை மாற்றத்தினால் பல நாடுகளில் உணவுப்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் நீட்சியாக வறட்சியும் உணவுப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. முன்னைவிட பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2016இல் 804 மில்லியன் மக்கள் பசியால் வாடினர் இப்போது அந்த எண்ணிக்கை 821 மில்லியனாக அதிகரித்துள்ளது.

தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் தீவிர உணவுப் பற்றாக்குறையும் சத்திண்மையும் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றத்தினால் கடுமையான வறட்சியும் பல நாடுகளில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. கோதுமை,அரிசி, மற்ற தானியங்கள் ஆகிய முக்கிய உணவுப்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமை நீடித்தால் இன்னும் 30 ஆண்டுகளில் வசதியான நாடுகளிலேயே, குறிப்பாக லண்டன்,வாஷிங்டன்,சிகாகோ,மற்றும் பாரீசிலும் மக்கள் சாப்பிடவே உணவு இருக்காது என்று எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வசதியான நாடுகளிலேயே உணவுப்பற்றாக்குறை ஏற்படும் என்றால், வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளின் நிலை அச்சமூட்டுவதாக உள்ளது என ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மைத்துறை கவலை தெரிவித்துள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon