மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 21 செப் 2019

சதுரங்க வேட்டை 2: ரிலீஸுக்கு சிக்கல் இல்லை!

சதுரங்க வேட்டை 2: ரிலீஸுக்கு சிக்கல் இல்லை!

அரவிந்த் சாமி, த்ரிஷா இணைந்து நடித்துள்ள படம் சதுரங்கவேட்டை 2. இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான மனோ பாலா தயாரித்துள்ளார். படத்தின் கதாநாயகன் அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி வைக்கப்பட்ட நிலையில் அப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. இதனால் படத்தின் ரிலீஸ் பாதிக்கப்படும் சூழல் உருவானது.

சதுரங்க வேட்டை 2 படத்துக்கான சம்பள பாக்கி ஒரு கோடியே 79 லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் அரவிந்த்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்தத் தொகையை ஆண்டுக்கு 18 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் அதுவரை படத்தை வெளியிடத் தடை விதிக்கவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவில்லை என அரவிந்த் சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மனுவுக்கு செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க பட தயாரிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருக்காது எனத் தெரிகிறது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon