மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

தெலங்கானா: காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கூட்டணி!

தெலங்கானா: காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கூட்டணி!

தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ், சிபிஐ ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆட்சிக்காலம் முடிவடைய 9 மாதங்கள் இருந்த நிலையில், முன்கூட்டியே தேர்தலை சந்திக்க தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் முடிவு செய்தார். இதற்காக கடந்த வாரம் அமைச்சரவை கூட்டப்பட்டு ஆட்சியைக் கலைப்பதற்கான தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில், அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். சந்திர சேகர ராவ் தலைமையில் காபந்து ஆட்சி நடந்துவரும் நிலையில், 105 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்த அவர், தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார்.

இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. நேற்று (செப்டம்பர் 11) ஐதாராபாத்திலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையின்போதே கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர அரசியலில் எதிரும் புதிருமான இருந்துவந்த காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 35 ஆண்டுகால தெலுங்கு தேசம் கட்சியின் வரலாற்றில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது இதுதான் முதல் முறையாகும்.

இதுகுறித்து தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி கூறுகையில், “தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டுவருகிறோம். எங்கள் கூட்டணிக்கு மக்கள் அமைப்புகள், தொழிலாளர்கள், பெண்கள் அமைப்புகளிடம் ஆதரவு கோருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் உத்தம் குமார் ரெட்டி, தெலுங்கு தேசம் மாநிலத் தலைவர் எல் ரமணா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இணைந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மனை சந்தித்தனர். தெலங்கானா சட்டசபையைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர். மாநிலத்தின் முதல்வராக சந்திர சேகர ராவ் தொடர்ந்து நீடித்தால் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடக்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon