மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

வெளிநாட்டு மணல்: அரசுக்கு உத்தரவு!

வெளிநாட்டு மணல்: அரசுக்கு உத்தரவு!

வெளிநாட்டு மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் செலுத்த, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக, மலேசியாவில் இருந்து ராமையா நிறுவனம் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்த மணலை வெளியில் எடுத்துச் சென்று விற்க தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து, மணல் இறக்குமதி நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தன. அந்த வழக்கில், தமிழக அரசின் தடையை ரத்து செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

இதனை எதிர்த்து, தமிழக அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்கிக்கொள்வதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக, மணல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒரு டன் மணலுக்கு ரூ.2,050 வழங்க தமிழக அரசு சம்மதம் தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை ஒரு டன் ரூ.2,050க்கு கொள்முதல் செய்து தமிழக அரசே விற்கலாம் என்று அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 12) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகையைச் செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு டன்னுக்கு 2,050 ரூபாய் வீதம், 55 ஆயிரம் டன் மணலுக்கான தொகை ரூ.11.27 கோடியை ஒரு வாரத்திற்குள் செலுத்தும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon