மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

ரகசியத்தை உடைத்த கோலி

ரகசியத்தை உடைத்த கோலி

ஓவல் டெஸ்டை டிரா செய்வதற்கு முயற்சிக்காமல், முடிவை நோக்கிப் பயணித்த காரணம் குறித்த ரகசியத்தை கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்று நடந்து முடிந்த கடைசி டெஸ்ட் போட்டியில் டிரா செய்வதற்கான வாய்ப்பு இருந்தும் இந்திய வீரர்கள் அதைப் பொருட்படுத்தாமல் முடிவை எதிர்நோக்கி மிகச் துணிச்சலாக ஆடி வந்தார்கள். இந்நிலையில் இந்த துணிச்சலான மனநிலைக்கு மாறிய ரகசியம் குறித்து பரிசளிப்பு விழாவின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மனம் திறந்தார்.

அப்போது பேசிய கோலி, "இந்திய அணிக்கு இன்னும் அனுபவம் தேவைப்படுகிறது. அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்ட அணியாக இங்கிலாந்து உள்ளது. இரண்டு மூன்று ஓவர்களில் ஆட்டம் மாறிவிட்டது. இங்கிலாந்து அணி பயமின்றி துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதையே நாங்களும் கடைபிடித்தோம். அதனால்தான் போட்டியை டிரா செய்ய முயற்சிக்கவில்லை. இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிகவும் சவால் நிறைந்தாக இருந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதொரு விளம்பரம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் 464 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி, கடைசி வரை கடுமையாக போராடி 345 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. எளிதில் விட்டுவிடாமல் கடைசி வரை போராடிய இந்திய அணியின் செயல்பாடுக்கு ராகுல், ரிஷப் பந்த் இருவர் மட்டுமே முக்கிய காரணம் என கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய கோலி, "இந்தப் போட்டியின் மொத்த பெருமையும் அந்த 2 இளம் வீரர்களையே சென்றடையும். பந்த் ஆடிய விதம் அவரது மன உறுதியைக் வெளிப்படுத்தியது. களத்திற்குள் செல்கையில் முடிவைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவர்களது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரது ஆட்டத்தை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இது இந்திய அணியின் எதிர்காலத்தைக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon