மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

அமமுகவில் விஜயபாஸ்கர்? தினகரன் பதில்!

அமமுகவில் விஜயபாஸ்கர்? தினகரன் பதில்!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் அமமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுவது தொடர்பாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை சென்றுள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக நேற்று கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று(செப்டம்பர் 12) காலை செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “எட்டுவழிச் சாலை தேவையில்லை என்பதுதான் மக்களின் விருப்பம். மலைகள், நீர்நிலைகளை அழித்து சாலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எட்டுவழிச் சாலையை ஆறுவழிச் சாலையாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். இந்த சாலை நிச்சயமாக வராது.

தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளது. மின்வெட்டுத் துறை அமைச்சராக தங்கமணி மாறி வருகிறார். யாருடைய ஆசீர்வாதம் இருப்பதால் தப்பித்துவிடலாம் என்று மின்சாரத் துறை அமைச்சர் நினைக்கிறார். நீதிமன்றத்தில் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதற்கான அறிகுறிதான் மின்வெட்டு சம்பவங்கள்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் அமமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “விஜயபாஸ்கர் எங்கள் கட்சியில் சேரப்போகிறார் என்பது உண்மையல்ல. ஊழல்வாதிகளை, துரோகிகளை நாங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். ஜெயலலிதாவின் விசுவாசிகளில் 90 சதவிகிதம் பேர் எங்களோடு உள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் வருவார்கள்” என பதிலளித்தார்..

ஆர்.கே நகரில் அதிமுக தோல்வியடைந்ததால் 20 ரூபாய் சிஸ்டம் குறித்து ஆளும் கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்த தினகரன், “திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் முடிவு இந்த ஆட்சிக்குப் பெரிய அடியாக இருக்கும். நாங்கள் மாபெரும் வெற்றியைப் பெறுவோம். தேர்தல் முடிவுக்குப் பின்னர், அரசைத் தாங்கி பிடித்திருக்கும் அரசியல் நோக்கர்கள் அடங்கிவிடுவார்கள்” என்று குறிப்பிட்டார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon