மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 9 டிச 2019

ஈரோடு: பட்டாசு விபத்தில் 3 பேர் பலி!

ஈரோடு: பட்டாசு விபத்தில் 3 பேர் பலி!

ஈரோட்டில் தீபாவளிக்காகக் கொண்டு வரப்பட்ட பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டதில், கடை உரிமையாளரின் மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர், அதே பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில்,

சுகுமார் தீபாவளி விற்பனைக்காகப் பட்டாசுகளை வாங்கச் சென்றார். அப்போது, கல்லூரியில் படிக்கும் அவரது மகன் கார்த்திக்கும் உடன்சென்றுள்ளார். பட்டாசுகளை வாங்கிய சுகுமார், சாஸ்திரி நகரில் உள்ள அவருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் பாதுகாப்பாக வைப்பதற்காக, லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இன்று காலை 6 மணியளவில் சென்றுள்ளார்.

அதிகாலையில் பட்டாசுகளை ஆட்டோவில் இருந்து சுகுமார் மற்றும் அவரது மகன் கார்த்திக் உட்பட கூலித்தொழிலாளி ஒருவரும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் இறக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, பட்டாசுகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் லோடு ஆட்டோவும், அருகில் நின்ற மற்றொரு ஆட்டோவும் தீயில் கருகின. அருகில் இருந்த 8 வீடுகளும் இடிந்து விழுந்தன. இந்த பட்டாசு விபத்தில், கடை உரிமையாளர் சுகுமாரின் மகன் கார்த்திக், கூலித் தொழிலாளி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினரும், போலீசாரும் பலியானவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெடிவிபத்து ஏற்பட்டதும், மளிகைக்கடை உரிமையாளர் சுகுமார் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் வைக்கப்பட்டதாகக் கூறிய போலீசார், தப்பியோடிய சுகுமாரைத் தேடி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon