மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 9 டிச 2019

நவாஸுக்கு பரோல்!

நவாஸுக்கு பரோல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃப்பின் மனைவி பேகம் குல்சூம் காலமானதைத் தொடர்ந்து நவாஸுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃப்பின் மனைவி பேகம் குல்சூம் நவாஸ் புற்றுநோய்க்காக லண்டன் மருத்துவமனையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (செப்டம்பர் 11) காலமானார். அவரது உடலை பாகிஸ்தான் கொண்டுவந்து அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி சொகுசு இல்லம் வாங்கிய வழக்கில், நவாஸ் ஷெரிப், மகள் மரியம் மற்றும் அவரது கணவர் என 3 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பேகம் குல்சூமின் மரணத்தையடுத்து மூவருக்கும் 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டுள்ளது. செரீஃப் குடும்பத்துக்கு சொந்தமான ஜாட்டி உம்ரா இல்லத்தில் பேகத்தின் உடல் வெள்ளியன்று அடக்கம் செய்யவுள்ளதால், மூவரின் பரோல் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும் நவாஸ் செரீஃபின் சகோதரருமான சபாஸ் செரீஃப், மூவரையும் 5 நாட்களுக்கு விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்துள்ளார். ஜாட்டி உம்ரா இல்லத்தைத் துணை சிறைச்சாலையாக அறிவிக்ககோரி அரசுக்கு மனு அனுப்பவும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி முடிவு செய்துள்ளது.

பேகத்தின் இறுதிச்சடங்கு லண்டனில் இன்று(செப்டம்பர் 12) நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அவரது உடல் நாளை பாகிஸ்தான் கொண்டுவரப்படவுள்ளது.

பேகம் குல்சூம் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தளபதி கியூமர் ஜாவத் பாஜ்வா, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon