மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் சொல்லத் தேவையில்லை!

ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் சொல்லத் தேவையில்லை!

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் வேலுமணியுடன் விவாதிக்கத் தயார் என்று ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டிருந்த நிலையில், “ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் சொல்லத் தேவையில்லை” என்று வேலுமணி பதிலளித்துள்ளார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒப்பந்தப் பணிகளை வழங்கியுள்ளதாக டைம்ஸ் நவ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், வேலுமணி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த வேலுமணி, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்துவிட்டால், அரசியலிலிருந்தே விலகிவிடுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து வேலுமணியுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கோவை விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 12) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “ஆர்.எஸ்.பாரதி பியூன் வேலை பார்ப்பவர். ஸ்டாலின் சொல்வது குறித்து புகார் கொடுக்கும் பியூன் வேலையைத்தான் அவர் பார்த்துக்கொண்டுவருகிறார். அவர் அனைவரின் மீதும் புகார் மட்டும்தான் கொடுப்பார்.

என்னைப் பதவி விலகக் கோரியது ஸ்டாலின்தான், எனது ஊழல் குற்றச்சாட்டுக்களை அவர் நிரூபித்தால் இன்றைக்கே பதவி விலகத் தயாராக இருக்கிறேன். அமைச்சர் பதவி மட்டுமல்லாது கட்சிப் பதவியைவிட்டு விலகவும் தயாராக உள்ளேன். எனவே ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் சொல்ல முடியாது. அவருக்கு பதில் சொல்ல எங்கள் கட்சியில் கீழ்மட்ட பதவிகளில் ஆட்கள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon