மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

கோமாவில் பெண்: நீதிமன்றம் கேள்வி!

கோமாவில் பெண்: நீதிமன்றம் கேள்வி!

18 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் குணப்படுத்த முடியுமா என்று மருத்துவர் குழு ஆய்வறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகேயுள்ள இடைக்கட்டான்களை பகுதியைச் சேர்ந்தவர் ஆதர்ஷா. சமீபத்தில், இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையைச் சேர்ந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு, கடிதமொன்றை அனுப்பினார். அதில், 18 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் ஷோபனா கோமா நிலைக்குச் சென்றதாகத் தெரிவித்திருந்தார். பிரசவத்தின்போது அளிக்கப்பட்ட மயக்க மருந்தினால், அவர் இந்நிலையை அடைந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். தனது தந்தை பிரிந்து சென்றுவிட்ட நிலையில், பாட்டியின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

“என்னுடைய தாயாருக்குத் தவறான சிகிச்சை செய்தது தொடர்பாக இழப்பீடு கோரிய வழக்கு, மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. எனது படிப்பு மற்றும் தாயாரின் சிகிச்சை செலவுகளுக்குப் பணம் இன்றி நான் தவித்து வருகிறேன்” என்று அந்த கடிதத்தில் ஆதர்ஷா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்.

இதுகுறித்த வழக்கு, நேற்று (செப்டம்பர் 11) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆதர்ஷாவின் தாயார் ஷோபனாவை கோமா நிலையில் இருந்து மீட்க முடியுமா என்றும், இல்லையெனில் அவரைக் கருணைக் கொலை செய்ய முடியுமா என்றும், ஆசாரிப்பள்ளம் மாவட்ட மருத்துவமனை டீன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

அறிக்கை அடிப்படையில் தான் இந்த நீதிமன்றம் ஆதர்ஷாவுக்கு கல்விக்கு உதவி செய்வது உள்ளிட்ட எந்த முடிவுக்கும் வர முடியும் எனக்கூறிய நீதிபதிகள், விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon