மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ரேவதியின் தாய்மை!

ரேவதியின் தாய்மை!

சோதனைக் குழாய் மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்த்துவருகிறார் நடிகை ரேவதி.

சினிமா மற்றும் சின்னத்திரையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனி அடையாளத்துடன் வலம் வருபவர் நடிகை ரேவதி. 1981ஆம் ஆண்டில்,பாரதிராஜாவின் மண்வாசனை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகமானார். மகளிர் மட்டும், கன்னி ராசி, மௌன ராகம், அவதாரம், தேவர் மகன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்த ரேவதி நடிகையாக ஒரு முறையும், இயக்குநராக இரு முறையும் தேசிய விருது பெற்றுள்ளார்.

‘புதிய முகம்’ என்ற திரைப்படத்தில் நடித்த போது, அதில் நடித்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சுரேஷ் மேனனை காதலித்து,1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை 14 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2002ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றதை தொடர்ந்து, ரேவதி தனியாகவே வசித்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாகப் பெண் குழந்தை ஒன்றை ரேவதி வளர்த்து வருகிறார். அந்தக் குழந்தையை ரேவதி தத்தெடுத்துள்ளதாக வதந்திகள் பரவின. குழந்தை குறித்து எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருந்த ரேவதி, தற்போது மௌனம் கலைத்துள்ளார். அந்தக் குழந்தை தனது குழந்தை தான் எனக் கூறியுள்ளார்.

இந்தநிலையில் ரேவதி சோதனை குழாய் மூலம் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். 5 வருடங்களுக்குப் பிறகு இப்போது இந்தத் தகவலை அவர் வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி ரேவதி, “வாழ்க்கையில் பல பிரச்சினைகளை நான் கடந்து வந்துள்ளேன். தாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை. அதற்காக ஏங்கியிருக்கிறேன். எனவே சோதனை குழாய் மூலம் கர்ப்பம் அடைந்து பெண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். அவளுக்கு மகி என்று பெயர் சூட்டியிருக்கிறேன்.

அவளை நான் தத்தெடுக்கவில்லை. தத்தெடுத்து வளர்ப்பதாக வதந்தி பரவியிருக்கிறது. எனவே தான் உண்மையை வெளியிட்டிருக்கிறேன். தற்போது என் குழந்தை மகிக்கு 5 வயது ஆகிறது. அவளே என் உலகம். ஒரு அம்மாவாக அவளை வளர்த்து ஆளாக்குவது என் பொறுப்பு” என்று கூறியுள்ளார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon