மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

முதல்வர் மீதான ஊழல் வழக்கு: திமுக கூடுதல் மனு!

முதல்வர் மீதான ஊழல் வழக்கு: திமுக கூடுதல் மனு!

முதல்வர் மீதான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து சிறப்புப் புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளில் நடந்துள்ள 4800 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான புகார் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச் சாலை திட்டம் உள்பட ஐந்து நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை, முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி பி.சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன் செய்யாதுரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்குச் சட்ட விரோதமாக வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார்.

இந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஆர்.எஸ்.பாரதி கூடுதல் மனு ஒன்றை நேற்று (செப்டம்பர் 11) தாக்கல் செய்துள்ளார்

அதில் முதலமைச்சரின் கீழ் தான் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை செயல்படுகிறது. எனவே, விசாரணை நியாயமான முறையில் நடக்க வாய்ப்பிருக்காது என்பதால் வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து சிறப்புப் புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி அந்த விசாரணையைச் சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon