மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: அரசுக்கு கெடு!

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: அரசுக்கு கெடு!

உயர் நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017 நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (செப்டம்பர் 11) விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், வார்டு மறுவரையறை தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், அந்த வழக்கை திமுக இன்னும் திரும்பப் பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், “வார்டு மறுவரையறை செய்வது தொடர்பாக ஆணையம் அமைத்து தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது சட்டமன்ற நடவடிக்கை என்பதால், அரசுத் துறை அதிகாரிகளான ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் எந்தவிதத்திலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பொறுப்பாக மாட்டார்கள்” என்று வாதிட்டார்.

இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு வரும் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசு துறை செயலாளர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து இரு அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் விலக்கு அளித்தும் உத்தரவிட்டனர்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon