மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

வெற்றியுடன் விடை பெற்றார் குக்

வெற்றியுடன் விடை பெற்றார் குக்

இந்திய வீரர்களின் இரண்டு சதங்கள், ஆண்டர்சனின் அதிக விக்கெட் சாதனை, கடைசி கட்ட பரபரப்பு... இப்படி பல்வேறு சுவாரஸ்யங்களைக் கடந்து ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியுடன் அலெஸ்டர் குக் விடைபெற்றுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 332 ரன்களும், இதற்கு பதிலடியாக இந்தியா 292 ரன்களும் குவித்திருந்தன. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து, இந்தியாவின் வெற்றிக்கு 423 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

கடின இலக்கை துரத்திய இந்திய அணியின் முதல் 3 விக்கெட்டுகளை வெறும் 2 ரன்களுக்குள் வீழ்த்தி ஆரம்பத்திலேயே நெருக்கடியை ஏற்படுத்தியது இங்கிலாந்து. பின்னர் ராகுல் - ரஹானே ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது.

முக்கிய விக்கெட்டுகள் சரிந்துவிட்டதால், கடைசி நாளான நேற்று விரைவில் இந்தியாவை வீழ்த்திவிடலாம் என்ற நோக்கிலேயே இங்கிலாந்து களமிறங்கியது. விக்கெட்டுகளைப் பற்றி துளிகூட கவலையின்றி துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார் ராகுல். மறுமுனையில் பொறுமையாக ஆடிவந்த ரஹானே 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து அந்த ஹனுமா விஹாரியும் வந்த வேகத்தில் நடையை கட்டினார். அப்போது இந்தியா 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

பின்னர் ராகுல், ரிஷப் பந்த் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டத் தொடங்கினர். ஒருகட்டத்தில் இந்தப் போட்டியை பார்த்த ரசிகர்களுக்கு இது டெஸ்ட் போட்டியா அல்லது ஒருநாள் போட்டியா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு இவர்களது ஆட்டம் இருந்தது. சராசரியாக ஓவருக்கு 2 பவுண்டரிகள் வீதம் விளாசித் தள்ளி இருவரும் சதம் கடந்தனர். இவர்களது ஆட்டத்தை பார்க்கையில் இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெருவதற்கான வாய்ப்பும் இருந்தது.

இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டுக்கு 207 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த்தும் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதுவரை வெற்றியை நோக்கி பயணித்த இந்தியா அவர்களின் விக்கெட்டுக்கு பிறகு டிராவை நோக்கி பயணிக்கத் தவறியது. அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் இந்தியா 345 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என இங்கிலாந்து கைப்பற்றியது. அலெஸ்டர் குக் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விராட் கோலி, சாம் கரன் இருவரும் இத்தொடரின் நாயகர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் கைப்பற்றிய 3ஆவது விக்கெட், டெஸ்ட் அரங்கில் அவரது 564ஆவது விக்கெட்டாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் க்ளென் மெக்ராவை (563 விக்கெட்) பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தப் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெஸ்டர் குக் விடைபெற்றார். எளிய வெற்றியை ருசிக்காமல், கடைசி நிமிடம் வரை பரபரப்பாகக் கொண்டு சென்று நடந்து முடிந்த இந்தப் போட்டி அவரது வாழ்நாளில் மறக்க முடியாத சிறந்த பொக்கிஷமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon