மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஏப் 2020

ட்ரம்ப்: சரிந்த மக்கள் ஆதரவு!

ட்ரம்ப்: சரிந்த மக்கள் ஆதரவு!

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அமெரிக்கர்களின் ஆதரவு இதுவரை இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளதாகக் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

சிஎன்என்(CNN)-ஐ சேர்ந்த எஸ்எஸ்ஆர்எஸ் எனும் அமைப்பு வெளியிட்ட கருத்துக்கணிப்பில், ட்ரம்ப் ஆட்சியின் மீதான மக்களின் ஆதரவு 36 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த மாதம் இது 42 சதவிகிதமாக இருந்தது. ட்ரம்ப்பின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இது 40 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு இப்படி இருந்தாலும், ட்ரம்புக்கு வலதுசாரிகளின் ஆதரவு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. வலதுசாரிகள் சந்தை ஆக்கிரமிப்புகளில் முன்னிலை வகித்தாலும், எண்ணிக்கை அளவில் சிறுபான்மையினராகவே இருக்கின்றனர். அரசியல் சாராத நடுநிலையாளர்களின் ஆதரவு விகிதம் என்பது 47 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாகக் குறைந்துள்ளதும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ட்ரம்புக்கு என்னதான் ஆச்சு?

உண்மையான பிரச்சினைகளுக்குத் தெளிவான விளக்கங்கள் அளிக்காமல், ‘காத்திருங்கள் காலம் மாறும்’ என்று மோடி போல அவர் அவசரப்பட்டு அறிவிப்பளித்தது, தனக்கான ஆதரவு குறைந்துவருகிறது என்பதைத் தெரிந்துகொண்ட பின்புதான்.

ட்ரம்பின் ஆதரவு சரிவுக்கு, “ட்ரம்ப் ஓர் அதிபரின் தகுதியைப் பேணிகாக்காமல், தினமும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருவது, ரஷ்யாவுடன் கூட்டுச்சதி செய்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது தொடர்பாக நடந்துவரும் விசாரணை, வடகொரியா ட்ரம்ப்புக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல் போனபோதிலும், தொடர்ந்து எதிர்வினையாற்றாமல் இருப்பது, இந்தியா, சீனா மற்றும் அண்டை நாடுகளுடன் நடத்தி வரும் வர்த்தகப் போர்” ஆகியவை முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

மேலும், வெள்ளை மாளிகையில் இருக்கும் அதிகாரிகளே ட்ரம்புக்கு எதிரான கருத்துகளை பொதுவெளியில் கூறுவது, ட்ரம்ப்பை 'முட்டாள்' என்றும் '5 வயது குழந்தை போன்ற புரிதல் கொண்டவர்' என்றும் சித்திரிப்பதாக வெளியாகியுள்ள புத்தகம் ஆகியவையே முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பதிலளித்துள்ள அதிபர் ட்ரம்ப், “நமது ஜிடிபி வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் தற்போது நடந்து வருவது ஒன்றும் அதிசயமில்லை. இனி நடக்கப் போவதுதான் அதிசயம். ஏனென்றால் நாம் இப்போதுதான் தயாராகிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon