மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 19 செப் 2019

ஜோதிகா: வேகமெடுக்கும் செகண்டு இன்னிங்ஸ்!

ஜோதிகா: வேகமெடுக்கும் செகண்டு இன்னிங்ஸ்!

ஜோதிகா நடிக்கும் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா, 2017ஆம் ஆண்டு மகளிர் மட்டும் படத்தில் நடித்தார். அவ்வப்போது தலைகாட்டி வந்த அவருக்கு 2018 முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் புதிய படங்கள் வெளிவராத நிலையில் தொடர்ச்சியாக அந்தப் படம் திரையரங்குகளில் ஓடியது.

மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம், ராதா மோகன் இயக்கத்தில் காற்றின் மொழி ஆகிய இரு படங்களில் நடித்துள்ள இவர், அந்தப் படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். இந்த நிலையில் அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த அறிவிப்பைத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon